மளிகை கடைக்காரருக்கு போன் செய்த விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் - பின்னணி என்ன?
நமது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்து அதில், நான் விராட் கோலி பேசுகிறேன் என கூறினால், நாம் போலியான அழைப்பு என்று தான் நினைப்போம்.
அதே போல், மளிகை கடை வைத்துள்ள நபருக்கு விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற கிரிக்கெட் பிரபலங்களிடமிருந்து உண்மையாவே அழைப்பு வந்துள்ளது அதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
மளிகை கடைக்காரருக்கு போன் செய்த கோலி
சட்டீஸ்கர் மாநிலம், காரியபந்த் மாவட்டத்தை சேர்ந்த மணீஷ் என்ற இளைஞர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கடந்த ஜூன் 28 ஆம் திகதி, அங்குள்ள கடை ஒன்றில் ஜியோ சிம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில், அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசும் நபர் நான் விராட் கோலி பேசுகிறேன் என தெரிவித்துள்ளார். போலி அழைப்பு என நினைத்த மணீஷ், நான் எம்.எஸ்.தோனி பேசுகிறேன் என விளையாட்டாக கூறியுள்ளார்.
அதே போல் மற்றொரு அழைப்பில் வந்த நபர், நான் ஏபி டிவில்லியர்ஸ் பேசுகிறேன் என கூறியுள்ளார். இவரும் நான் எம்.எஸ்.தோனி என கூறியுள்ளார்.
இதனையடுத்து வந்த மற்றொரு அழைப்பில் பேசிய நபர் "நான் ரஜத் படிதார் பேசுகிறேன். இது எனது பழைய எண். பயிற்சியாளர்கள், வீரர்கள் ஆகியோர்களின் தொடர்புகள் உள்ள முக்கிய எண். இதனை கொடுத்து விடுங்கள்" என தெரிவித்துள்ளார்.
இதனையும் விளையாட்டாக கருதிய மனிஷ், வழக்கம் போல் நான் எம்.எஸ்.தோனி பேசுகிறேன் என கூறியுள்ளார். சரி நான் காவல்துறையை அனுப்புகிறேன் என கூறி எதிர்முனையில் பேசிய நபர் அழைப்பை துண்டித்து விட்டார்.
அடுத்த 10 நிமிடங்களில், மணீஷ் வீட்டின் முன்பு காவல்துறையினர் வந்துள்ளனர். அப்போது தான் அவரிடம் பேசிய நபர்கள் உண்மையாகவே விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், ரஜத் படிதார் என தெரிய வந்துள்ளது.
ரஜத் படிதாரின் பழைய சிம்
RCB அணித்தலைவர் ரஜத் படிதார் முன்னதாக பயன்படுத்திய சிம் கார்டு 90 நாட்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது.
90 நாட்களுக்கு மேல், செயல்பாட்டில் இல்லாத தொலைபேசி எண்களை வேறு நபருக்கு தொலைத்தொடர்பு நிருவனங்கள் வழங்கி விடுகின்றன. அதே போல், ரஜத் படிதார் முன்னதாக பயன்படுத்திய சிம் கார்டு, மணீஷ்க்கு வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் இது குறித்து விளக்கிய போது, மணீஷ் சிம் கார்டை அவர்களிடம் வழங்கி விட்டார்.
இது குறித்து பேசிய அவர், தவறான எண் மூலம் என்னால் விராட் கோலியிடம் பேச முடிந்தது. என் வாழ்க்கையின் இலக்கு நிறைவேறியது என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |