திடீரென முடி உதிர்ந்து வழுக்கை தலையாவதால் கிராம மக்கள் பீதி
இந்திய கிராமம் ஒன்றில் உள்ள மக்களுக்கு திடீரென முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கையாவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
திடீரென முடி உதிர்தல்
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, புல்தானா மாவட்டத்தில் உள்ள பாண்ட்கான், கல்வாட், ஹிங்னா கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள ஆண், பெண் என இருவரும் கடந்த சில வாரங்களாக முடி உதிர்தல் பிரச்சனைக்கு உள்ளாகி வருகின்றனர். இதில், பலருக்கு வழுக்கை தலை ஆகும் அளவுக்கு பிரச்னை ஏற்படுகிறது.
இவர்களுக்கு, உச்சந்தலையில் சிறிது அரிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, சில நாட்களுக்கு பின் ரோமத்தின் தன்மை சொரசொரப்புடன் மாறுதல் ஏற்பட்டு 72 மணி நேரத்தில் வழுக்கையாகி தானாகவே முடி உதிர்ந்து விடுகிறது.
அவர்கள் தங்களது தலைமுடியை லேசாக கோதினாலும் மொத்த முடியும் வந்து விடுவதாக கூறுகின்றனர். இந்த மூன்று கிராமங்களில் சுமார் 50 பேருக்கு கடந்த ஒரு வாரத்தில் முடி உதிர்ந்துள்ளதால் அச்சம் நிலவுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கான காரணம் என்னவென்று இன்னும் கண்டறியவில்லை.
இருந்தாலும் மாவட்ட அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று தண்ணீர் மாதிரிகளை எடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, முடி மற்றும் தோல் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் ரமா பாட்டீல் கூறுகையில், "கடந்த 10 நாட்களாக எங்கள் கிராமங்களில் ஒருவித மர்ம நோய் பரவுகிறது. முடியை தொட்டாலே உதிர்கிறது" என்றார். முடி உதிர்தல் ஆரம்பித்து விட்டாலே ஒரு வாரத்தில் தலை வழுக்கை ஆவதால் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |