பழி வாங்கப்படும் விராட் கோலி? இலங்கை தொடரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்
விராட் கோலி விளையாடும் 100வது டெஸ்ட் போட்டி அவரின் இரண்டாவது வீடாக கருதப்படும் பெங்களூரில் நடக்கும் என முதலில் கூறப்பட்ட நிலையில் தற்போது மொகாலியில் தான் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற இருந்த டெஸ்ட் தொடரை கடைசியாக நடத்த வேண்டுமென கடந்த மாதம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்திருந்தது.
அதை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ முதலில் டி20 தொடரையும் அதன்பின் டெஸ்ட் தொடரையும் நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது. அதன்படி கடைசியாக நடைபெற இருந்த டி20 தொடர் முதலில் வரும் பிப்ரவரி 24ஆம் திகதி லக்னோவில் துவங்க உள்ளது. அதன்பின் பிப்ரவரி 26 மற்றும் பிப்ரவரி 27 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ள 2வது மற்றும் 3வது டி20 போட்டிகள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசலா மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் வரும் மார்ச் 3ஆம் திகதியும் 2வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 12ஆம் திகதிபெங்களூருவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்று அறிவிப்பால் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியை தனது 2வது வீடாக கருதும் பெங்களூருவில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணையின்படி தனது 100ஆவது போட்டியை பெங்களூருவில் விளையாட இருந்தார். இது வேண்டுமென்றே கோலி மீது கொண்ட வன்மத்தில் பிசிசிஐ செய்த செயலா என கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் பணிச்சுமை காரணமாக டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட விருப்பம் உள்ளதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். இருப்பினும் உலக கோப்பையை வாங்கித் தரவில்லை என்ற காரணத்தால் அவரை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நீக்கியது.
அப்போது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். அதுபற்றி கோலி பேசுகையில், தன்னை யாரும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளவில்லை என உண்மையை உடைத்து பேசினார்.
இதையடுத்து பிசிசிஐ கோலியை பார்த்து கொள்ளும் என அதற்கு கங்குலி பதில் அளித்த நிலையில் தற்போது நடப்பதை பார்த்தால் வேண்டுமென்றே இப்படி செய்கிறதா என கேள்வி எழாமல் இல்லை.