நடுவரிடம் சண்டை போட்ட விராட் கோலி! மைதானத்தில் பரபரப்பு
முகமது ஷமிக்காக அம்பயரிடம் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் துடுப்பாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 223 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ஓட்டங்களும், புஜாரா 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை ரபாடா 4 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளும், மகாராஜ், லுங்கி நிகிடி மற்றும் ஒலிவியர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனையடுத்து, தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 210 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கீகன் பீட்டர்சன் 72 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணியை பொறுத்தவரை பும்ரா 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வருகிறது.
இந்த நிலையில், ஆட்டத்தின்போது விராட் கோலி அம்பயரிடம் கோபமாக வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பந்து வீசும்போது டேஞ்சர் ஜோன் பகுதியில் கால் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைப் பார்த்த அம்பயர் முகமது ஷமி அழைத்து எச்சரித்தார். ஸ்டம்புக்கு நேராக இருக்கும் மையப் பகுதியை டேஞ்சர் ஜோன் என கூறுவார்கள்.
இதுபோன்று மீண்டும் 2 முறை அவரை அழைத்து நடுவர் எச்சரிக்கை செய்ததால் விராட்கோலி கோபம் அடைந்தார். உடனே நேராக நடுவரிடம் சென்ற விராட் கோலி இதுகுறித்து வாக்குவாதம் செய்தார்.
இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஆனால் உண்மையில் முகமது ஷமி டேஞ்சர் ஜோன் பகுதியில் கால் வைத்தது வீடியோவில் தெரியவந்தது.
