நடப்பு ஐபிஎல்லில் தொடர்ந்து 3 டக் அவுட்! மீண்டும் பார்முக்கு கோலி திரும்பியது எப்படி? தெரிந்த ரகசியம்
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 73 ரன்கள் குவித்து அதிரடியான பார்முக்கு திரும்பியுள்ள கோலி தனது பயிற்சியின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசினில் 3 முறை கோல்டன் டக்கான விராட் கோலி, நேற்று குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். 54 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி, 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 73 ரன்களை விளாசி பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இது குறித்து பேசிய கோலி, தொடர்ந்து அவுட்டாகி வந்ததும், எனக்கு என்ன நடக்கிறது என்று நானே யோசிக்க தொடங்கிவிட்டேன். நான் எப்போதும் போல் தீவிரமாக உழைக்க விரும்புகிறேன். அணிக்கு வெற்றியை தேடி தர விரும்புகிறேன்.
கடினமாக உழைக்கும் போது, அதற்கான மாற்றங்கள் உடனே நிகழாது. அப்படி நடக்கும் சமயத்தில் முன்பை விட அதிகமாக உழைக்க வேண்டும். சரியான அணுகுமுறையும் தேவை.
சில சமயம், நம் மனதில் எந்த பந்தை எப்படி அடித்தால் சரியாக இருக்கும் என்பதை விட, அப்படி எல்லாம் அடித்தால் தவறு நிகழ்ந்து விடுமோ என்று தான் யோசிக்க தோன்றும்.
இதனால் இன்றைய ஆட்டத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன். 90 நிமிடம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டேன். எந்த பந்தை எப்படி அணுக வேண்டும் என்ற தெளிவு நேற்றைய பயிற்சியின் போது கிடைத்தது என கூறியுள்ளார்.