பிளான் போட்டு விராட் கோலி விக்கெட்டை காலி செய்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி டக் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்திய அணி பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 9 ஆம் தேதி நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இதனையடுத்து 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 169 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதனிடையே இந்த போட்டியில் விராட் கோலி ஒரு ரன் கூட எடுக்காமல் இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அவர் அல்சாரி ஜோசப் பந்துவீச்சில் விக்கெட் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இந்த தொடரின் மூன்று போட்டியிலும் மிக விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்த விராட் கோலி கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.