"போதிய தைரியம் இல்லை" நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது குறித்து விராட் கோலி சொன்ன காரணம்
நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும், உடல் மொழியிலும் தைரியமாக இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 தொடரில், கடந்த வாரம் பாகிஸ்தானிடம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
அதனைத் தொடர்ந்து சரியாக 7 நாட்களுக்குப் பிறகு, இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியடைந்தது.
இந்த ஆட்டத்தில், இந்திய ஆணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து வெறும் 110 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அணியின் ஸ்டார் வீரர்கள், மூத்த வீரர்கள் என எதிர்பார்க்கப்பட்ட அனைவரும் சொற்ப ஓட்டங்களில் விக்கட்டுகளை இழந்தனர்.
அதனால், அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 14.3 ஓவரில் 111 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, இந்திய அணியை படுதோல்விக்கு தள்ளியது.
ஆட்டத்திற்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, "பேட்டிங் அல்லது பந்துவீச்சில் நாங்கள் போதிய அளவு தைரியமாக இருந்தோம் என்று நான் நினைக்கவில்லை. மேலும் எங்கள் உடல் மொழியால் நாங்கள் தைரியமாக இருக்கவில்லை" என்று கூறினார்.
Photo: Michael Steele-ICC/ICC/Getty Images
இப்போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகினாலும், இந்தத் தோல்வி மீண்டும் கோலியின் தலைமை மீது கேள்விகளை எழுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
அணி மீதான எதிர்பார்ப்புகளின் எடை குறித்து கேட்டதற்கு, கோலி, "நீங்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும்போது உங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும் - அது ரசிகர்களிடமிருந்து மட்டுமல்ல, வீரர்களுக்கும் இருக்கும்" என்றார்.
"எனவே எங்கள் விளையாட்டுகளில் எப்போதும் அதிக அழுத்தம் இருக்கும், பல ஆண்டுகளாக நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொருவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு அணியாக ஒன்றாகச் சமாளிக்கும் போது நீங்கள் அதை முறியடிப்பீர்கள். ஆனால், இந்த கடைசி இரண்டு விளையாட்டுகளில் நாங்கள் அதைச் செய்யவில்லை".
Photo: Twitter
தொடர்ந்து பேசிய அவர், "எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பதற்காக இந்திய அணி வித்தியாசமாக விளையாடத் தொடங்குகிறது என்று அர்த்தமல்ல. நாங்கள் நன்றாக இருக்கிறோம், விளையாட இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது" என்று மீதமுள்ள மூன்று குழு ஆட்டங்களைப் பற்றி கோலி குறிப்பிட்டார்.
2021 டி20 உலகக்கோப்பை தொடரில் நிலைத்திருக்க இந்திய அணி எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டும்.
நவம்பர் 3-ஆம் திகதி ஆப்கானிஸ்தான், நவம்பர் 5-ஆம் திகதி ஸ்காட்லாந்து மற்றும் நவம்பர் 8-ஆம் திகதி நமீபியாவுடன் இந்தியா விளையாட உள்ளது.