அந்த சமயம் உதவியற்றவனாக உணர்ந்தேன்: வெளிப்படையாக பேசிய கோலி
கோல்டன் டக் ஆன சமயத்தில் தன்னை உதவியற்றவனாக உணர்ந்தாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் பதவியை விட்டு கோலி விலகிய பின்னர், தென் ஆப்பிரிக்க வீரரான பாப் டூ பிளீஸ்சிஸ் தற்போது அணியை வழி நடத்தி வருகிறார். அவரது தலைமையில் சிறப்பாக விளையாடி வரும் RCB அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் 7 வெற்றிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது.
ஆனால் விராட் கோலியின் துடுப்பாட்டம் தான் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அவர் இந்த தொடரில் மூன்று முறை கோல்டன் டக் ஆகியிருக்கிறார்.
இதுதான் அவரது மோசமான ஃபார்ம். இந்த நிலையில் இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறும்போது, 'என் வாழ்க்கையில் தொடர்ந்து 2 முறை கோல்டன் டக் ஆனது இல்லை. இப்படி நடந்ததே இல்லை.
அப்போது தான் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு உதவியற்றவன் எப்படி உணர்வார் என்பதை நானும் உணர்ந்தேன். வாழ்க்கையில் அனைத்தையும் பார்த்து விட்டேன் வெகு நாட்களுக்கு பிறகு டக் அவுட் ஆனதால் என்னை அறியாமலேயே சிரித்து விட்டேன்' என் தெரிவித்தார்.
மேலும், பாப் டூ பிளீஸ்சிஸ் தென் ஆப்பிரிக்காவின் அணித்தலைவர் ஆவதற்கு முன்பே நண்பரானவர் என்றும், தற்போது பெங்களுரு அணியில் விளையாடும் அவருக்கு களத்தில் முழு அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏபி டி வில்லியர்ஸ் அடுத்த ஆண்டு பெங்களுரு அணிக்கு புதிய வடிவில் பொறுப்பேற்பார் என்றும் குறிப்பிட்டார்.