என்ன நடந்தது? செய்தியாளர் சந்திப்பில் நடந்ததை அப்படியே போட்டுடைத்த விராட் கோலி
இந்திய கிரிக்கெட்டில் தன்னை சுற்றி வந்த வதந்திகள் மற்றும் சர்ச்சைகளுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்ட நாள் முதல், கோலி தொடர்பான வதந்திகளும் சர்ச்சைகளுக்கும் எல்லை இல்லாமல் போனது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து கோலி விலக உள்ளார்? ரோகித்துக்கும் கோலிக்கும் இடையே பனிப்போர்? டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என பிசிசிஐ விடுத்த கோரிக்கையை கோலி ஏற்கவில்லை? என பல ஊகங்கள் பரவின.
இந்நிலையில், இன்று காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த கோலி, அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கோலி கூறியதாவது, தென் ஆப்பிரிக்கா அணி உடனான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணித்தேர்வில் நான் பங்கேற்பேன் என தெளிவுப்படுத்தியுள்ளார்.
நான் தென் ஆப்பிரிக்கா உடனான ஒரு நாள் தொடரிலிருந்து விலகுவதாக பரவி வந்த தகவல்கள் நம்பகமானது அல்ல என கூறினார்.
மேலும், ஒருநாள் அணி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கோலி கூறியதாவது, டெஸ்ட் அணி தேர்வுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, இணைப்பை துண்டிப்பதற்கு முன், ஒருநாள் அணி கேப்டனாக நான் இருக்கமாட்டேன் என 5 தேர்வாளர்களும் என்னிடம் கூறினர், அதற்கு சரி என தெரிவித்துவிட்டேன்.
ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கோலி கூறியதாவது, நான் நீக்கப்பட்டதற்கான காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.டன் அதற்கான காரணங்களை பிசிசிஐ எடுத்துள்ளது.
எனக்கும் ரோகித்துக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. இதை கடந்த இரண்டரை வருடங்களாக தெளிவுப்படுத்தி தெளிவுப்படுத்தி நான் சோர்ந்துவிட்டேன்.
என்னுடைய எந்தவொரு முடிவும் செயல்பாடும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்காது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் விளையாடாதது அணிக்கு பெரிய இழப்பு தான், ஆனால் அதேசமயம் புதிய வீரர் திறமையை வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என கூறினார்.
டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகிய போது நடந்த சம்பவங்களை குறித்து கோலி கூறியதாவது, நான் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக போகிறேன் என பிசிசிஐ-யிடம் அறிவித்த போது, அவர்கள் அதை எந்தவித தயக்கமுமின்றி முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர்.
இது ஒரு முற்போக்கான முடிவு என்று அவர்கள் என்னிடம் கூறினர். அப்போதே ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டனாக தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன் என அவர்களிடம் கூறினேன்.
ஆனால் பிசிசிஐ-யும் தேர்வாளர்களும் நான் மற்ற வடிவங்களில் கேப்டனான இருக்கக்கூடாது என கருதினால் பரவாயில்லை என்றும் தெளிவாக தெரிவித்திருந்தேன் என கோலி தெளிவுப்படுத்தியுள்ளார்.