விராட் கோலி, ரிஷப் பண்ட் அணியிலிருந்து நீக்கம்! பிசிசிஐ முடிவு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணியின் வீரர்களான விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருவருக்கும் பிசிசிஐ ஓய்வு கொடுத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியிருக்கிறது. மீதம் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில், பணிச்சுமை காரணமாக இந்திய அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பங்கேற்கும் இந்த இருவருக்கும் ஓய்வு அளிக்கும் வகையில் அவர்கள் பயோ - பப்புள் பாதுகாப்பில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம், ரோஹித் சர்மா தலைமையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட் இருவரும் இடம்பெற்றுள்ளனர். மார்ச் 4-ஆம் திகதி தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி ஆகும்.
இதற்கு தயாராகும் விதமாகவும், நீண்ட பணிசுமையில் இருந்து விடுவிக்கும் வகையிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடங்கி, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கோப்பையுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐபிஎல் தொடர், நியூசிலாந்து தொடர், தென்னாபிரிக்க தொடர், மேற்கிந்திய தீவுகள் தொடர் என இந்திய அணி பயோ - பப்புள் பாதுகாப்பில் பல நாட்களாக இருந்து வருகிறார்கள்.
இந்த தொடர்களில் நவம்பரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரியான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து மட்டும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதேபோல், முதுகுவலி காரணமாக தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை. இந்தப் பணிச்சுமையை கருத்தில் கொண்டே இப்போது அவருக்கு ஓய்வு அளித்துள்ளது பிசிசிஐ.
இதுதொடர்பாக நேற்றைய போட்டி முடிந்ததும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் ஆலோசனை நடத்திய பின் அதிகாரபூர்வமாக இதனை அறிவித்துள்ளது.
அணியின் மொத்த விவரம்: 1.ரோகித் சர்மா (கேப்டன்), 2. பும்ரா (துணை கேப்டன்), 3. மயங்க் அகர்வால் 4. பிரியங் பஞ்சல் 5. விராட் கோலி 6. ஷ்ரேயாஸ் அய்யர் 7. ஹனுமன் விஹாரி 8. சுப்மன் கில் 9. ரிஷ்ப் பண்ட் 10. அஸ்வின் 11. ஜடேஜா 12. ஜெய்ன்ட் யாதவ் 13. குல்தீப் யாதவ் 14. முகமது சமி 15. சிராஜ் 16. உமேஷ் யாதவ் 17. சவுரப் குமார் 18.கேஎஸ் பரத்.
அதேபோல், அடுத்துவரும் தொடங்கவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அணியில், விராட் கோலி, பண்ட் இருவரும் இடம்பெறவில்லை.