இப்படியா செய்வீங்க? விராட் கோலி அறையை வீடியோ எடுத்து பரப்பிய ரசிகர்கள்... அதிரடி நடவடிக்கை
கோலி தங்கியிருந்த அறையை வீடியோ எடுத்த விவகாரம்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஹொட்டல் ஊழியர்களான ரசிகர்கள் பணி நீக்கம்
விராட் கோலி தங்கியிருந்த ஹொட்டல் அறையை ரசிகர்கள் வீடியோ எடுத்து வெளியிட்ட விவகாரம் தொடர்பில் ஹொட்டல் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி அவுஸ்திரேலியா சென்றுள்ளது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் அங்குள்ள கிரவுன் பெர்த் ஹொட்டலில் தங்கியுள்ளனர்.
ஹொட்டலில் விராட் கோலியின் அறையில் ரசிகர் ஒருவர் அனுமதியின்றி நுழைந்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ விராட் கோலியின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த வீடியோவால் கோபமடைந்த விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் ரசிகரை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்களை பார்க்க மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அவர்களின் எண்ணங்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.ஆனால் என் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.
இதன் மூலம் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டு இருப்பதாகவே கருதுகிறேன். ஹோட்டலில் தங்கும் போது என்னுடைய அறையில் கூட எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் பிறகு எனக்கு வேறு எங்கு கிடைக்கும். இதுபோன்ற செயலை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் விஷயமாகும்.
ரசிகர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம் என்றுள்ளார்.
இந்நிலையில் கோலி அறை வீடியோ வெளியான விவகாரத்தில் ஹொட்டல் நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது. அந்த வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதோடு இது தொடர்பில் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.