100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி படைக்க காத்திருக்கும் சாதனைகள் இதோ...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் மேலும் பல சாதனைகள் படைக்கவுள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் தொடங்கவுள்ளது. இப்போட்டி முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது போட்டி என்பதால் எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.
இதன்மூலம் 100வது போட்டியில் விளையாடும் 12வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். அதுமட்டுமல்லாமல் முதலாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 38 ரன்களை எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்வார். இதன்மூலம் இந்திய அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை அதிவேகமாக அடித்த 5வது வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.
தொடர்ந்து தற்போது 167 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள விராட் கோலி இந்த சாதனையை முதல் டெஸ்டில் படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.