கேப்டனாக கடைசி போட்டியில் தான் பேட்டிங் ஆடாமல் தனது இடத்தில் சூர்யகுமார் யாதவை களமிறக்கியது ஏன்? கோலி விளக்கம்
கேப்டனாக கடைசி டி20 போட்டியில் நேற்று பங்கேற்ற விராட் கோலி தான் பேட்டிங் ஆடாமல் சூரியகுமார் யாதவை களமிறக்கியது குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நமீபியா அணியை எதிர்த்து விளையாடியது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கோலி கேப்டனாக செயல்படும் கடைசி போட்டி என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றியை பெற்றது.
துவக்கவீரர் ராகுல் 54 ரன்களுடனும், சூரியகுமார் யாதவ் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
கேப்டனாக கோலிக்கு இது கடைசி போட்டி என்பதால் அவரது பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 3 ஆவது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 4 பவுண்டரி 25 ரன்கள் குவித்தார்.
இப்படி கடைசி போட்டியில் தனக்கு முன் சூரியகுமார் யாதவை களமிறக்கியது ஏன் என்றும் கேப்டன் கோலி போட்டி முடிந்து பதிலளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சூர்யகுமார் யாதவ் இந்த உலக கோப்பை தொடரில் போதுமான அளவு பேட்டிங் செய்யவில்லை.
அவருக்கு பேட்டிங் செய்ய நேரமும் கிடைக்கவில்லை. எனவே இந்த போட்டியில் தன்னுடைய இடத்தில் சூரியகுமார் யாதவை களமிறக்கியதாக தெரிவித்துள்ளார்.