புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி
சட்ட விரோத புலம்பெயர் மக்கள் அல்லது குற்றவாளிகளைத் திரும்பப் பெற மறுக்கும் நாடுகள் விசா தடையை எதிர்கொள்ள நேரிடும் என்று பிரித்தானிய அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
தடைகளை எதிர்கொள்வார்கள்
பிரித்தானியாவின் நாடுகடத்தல் நடவடிக்கையில் ஒத்துழைக்க மறுப்பவர்கள் தடைகளை எதிர்கொள்வார்கள் என்று குடிவரவு அமைச்சர் ஏஞ்சலா ஈகிள் அறிவித்துள்ளார்.
அதில் விசா தடை, விசா பெற அதிக செலவிட நேர்வது அல்லது வேண்டுமென்றே விசா ஒப்புதலைத் தாமதப்படுத்துவது உள்ளிட்டவை அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கும் இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடுகடத்தல் விவகாரத்தில் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால், அனைத்து முறைகளையும் பயன்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் ஏஞ்சலா ஈகிள் தெரிவித்துள்ளார்.
குற்றம் செய்ததாலோ அல்லது சட்டவிரோதமாக வந்ததாலோ பிரித்தானியாவில் தங்கியிருக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்றும், அவர்களை வெளியேற்ற உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் லேபர் கட்சி உறுதியளித்துள்ளது.
இதுவரை 19,000
மேலும், ஜூலை மாதம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இதுவரை இதுபோன்ற 19,000 பேர்களை நாடுகடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இதில் பெரும்பாலானோர் தாமாகவே வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 850 பேர்களுடன் பிரித்தானியாவின் 4 மிகப்பெரிய நாடுகடத்தும் விமானங்கள் வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |