இலங்கைக்கு போனா எனக்கு 50 ஆயிரம் கிடைக்கும்! அப்போ விவேக் செய்த உதவி: குமரிமுத்துவின் பழைய வீடியோ
நடிகர் விவேக் செய்த உதவியை, நேர்காணல் ஒன்றில், கண்ணீர்மல்க கூறிய நடிகர் குமரிமுத்துவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நடிகர் விவேக்கிற்கு திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விவேக் செய்த உதவி, சமூகசேவைகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், நடிகர் குமரிமுத்து நேர்காணல் ஒன்றில் நடிகர் விவேக் செய்த உதவி குறித்து கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதில், நான் துணிந்து சொல்வேன், எந்தவொரு நகைச்சுவை நடிகர் என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை. இதை நடிகர் செந்திலிடம் கூட கூறியுள்ளேன்.
Vivek was a fantastic comedian in movies and a hero in real life. Remembering this incident that Kumarimuthu shared in an interview with myself and @Sri_TS . He will continue to live in our smiles.#ripvivek pic.twitter.com/HBgdf4R8ET
— Cinema Academy India (@CinemaAcademyIn) April 17, 2021
என்னுடைய கடைசி மகள் திருமணத்திற்கு கையில் பணமில்லை. அப்போது நான் தம்பி விவேக்கிடம் சென்று இலங்கையில் ஒரு நாடகத்துக்கு அழைக்கிறார்கள். நான் சென்றால் என் பெண் திருமணத்துக்காக 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கூறினேன்.
உடனே அவர், எனக்கு எவ்வளவு கிடைக்கும் என்றார்? நான் ஒரு இரண்டு லட்சம் ரூபாய் வாங்கித் தருகிறேன் என்றேன். அதன் பின் விவேக் நான் வருகிறேன் என்றார். விமான டிக்கெட், 5 ஸ்டார் ஹோட்டலில் அறை எல்லாம் போட்டுவிட்டேன்.
நாடகம் எல்லாம் முடிந்தவுடன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து, விவேக் சார் அறையைக் காட்டுங்கள் என்றார்கள்.
உடனே அழைத்துச் சென்றேன். அங்கு, விவேக்கிற்கான சம்பளமான 2 லட்ச ரூபாயை அவருடைய கையில் கொடுக்கிறார்கள்.
அதை அப்படியே வாங்கி, அண்ணே இந்தாங்க அண்ணே. 2 லட்ச ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள். உங்க பொண்ணு கல்யாணத்துக்கு கஷ்டப்படுகிறேன் என்று சொன்னீங்க, உங்களுக்கு 50 ஆயிரம் கொடுத்துட்டாங்களா? பொண்ணு கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்க அண்ணே என்று கூறினார்.
அன்று தான் நான் சந்தோஷத்தில் அழுதேன், என் வாழ்க்கையிலேயே கலைவாணருக்குப் பிறகு அவன் ஒருவன் தான் நடிகன். அவன் தான் மனுஷன் என்று கூறியுள்ளார்.