நடிகர் விவேக்கிற்கு நின்ற மூச்சை கொண்டு வர 45 நிமிடம் ஆனது! உண்மையை உடைத்த சிம்ஸ் மருத்துவர்
நடிகர் விவேக்கிற்கு நின்ற மூச்சை கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது என்று சிம்ஸ் மருத்துவர் கூறியுள்ளார்.
பிரபல திரைப்பட காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக, சென்னை, வடபழனியில் இருக்கும் சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், இது குறித்து சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் ராஜு சிவசாமி தனியார் இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நேற்று முன் தினம் காலை விவேக் தனது குடும்பத்தினரிடம் நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார்.
அதன் பின், அவரை அவரது குடும்பத்தினர் காலை 11 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் சுயநினைவிழந்த நிலையில்தான் வந்தார்.
அவருக்கு நாடித்துடிப்பே இல்லை. மூச்சும் இல்லை. ரத்த அழுத்தத்தையும் எங்களால் பதிவு செய்ய முடியவில்லை.
இதனால்,அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்று ஆக்ஸிஜன் கொடுத்து, கார்டியாக் மசாஜை 30 முறை செய்து அவரது இதயத்தை இயங்க வைக்க நாங்கள் போராடினோம்.
இதன் பலனாக மூச்சை மீண்டும் கொண்டு வருவதற்கு 45 நிமிடங்கள் ஆகிவிட்டது. அதன் பின்னர் அவருக்கு ஆஞ்சியோ செய்தோம்.
அப்போது தான் அவருக்கும்,100 சதவீதம் இதயத்தில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தோம். இதையடுத்து அவரது இதயத்தை இயங்க வைக்க எக்மோ கருவி பொருத்தி அடைப்பை சரி செய்தோம்.
இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து சிடி ஸ்கேன் எடுத்தோம். அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.
பின்னர் எக்மோ கருவியின் உதவி இல்லாமல் அவரது இதயத்தை இயங்க வைக்க அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தோம். இருப்பினும் முடியவில்லை என்று கூறினார்.