விண்வெளியில் ஒரு ஒளி நாளை கடந்து வாயேஜர் வரலாற்று சாதனை; புறக்கணிக்கப்பட்ட தமிழ்
voyager 1 reached one light day from earth: 1977 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட வாயேஜர் 1 விண்கலம், விண்வெளியில் ஒரு ஒளி நாளை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஒரு ஒளி நாளை கடந்த வாயேஜர் 1
1977 செப்டம்பர் 5 அன்று, வாயேஜர் 1 விண்கலத்தை வெளிப்புற சூரிய மண்டலத்தையும் சூரியனின் ஹீலியோஸ்பியருக்கு அப்பால் உள்ள விண்மீன் இடைவெளியையும் ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியது.

இதில், வாயேஜர் 1 விண்கலம் 1979 ஆம் ஆண்டில் வியாழனையும், 1980 ஆம் ஆண்டு சனியையம் கடந்து சென்றதோடு, 2012 ஆம் ஆண்டில் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி விண்மீன் இடைவெளியில் நுழைந்தது.
விண்மீன் இடைவெளிக்கு நுழைந்த முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் என்ற பெருமையை இந்த விண்கலம் பெற்றது.
49 ஆண்டுகளாக பயணித்து வரும் இந்த விண்கலம், இன்று பூமியிலிருந்து ஒரு ஒளி-நாள் (One Light-Day) தொலைவை எட்டிய முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
விண்வெளியில் ஒளி ஒரு வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது. அந்த வேகத்தில் 24 மணி நேரத்தில் ஒளி கடக்கும் தூரம் சுமார் 2,596 கோடி கிலோ மீட்டர். வாயேஜர்-1 மணிக்கு 61,000 கிலோ மீட்டர் வேகத்தில் தற்போது இந்த தூரத்தை எட்டியுள்ளது.

இனி பூமியிலிருந்து அனுப்பப்படும் தகவல்கள் விண்கலத்தைச் சென்றடைய 24 மணி நேரமும், பதில் திரும்ப வர 24 மணி நேரமும் ஆகும்.
வாயேஜர் 1 எதனுடனும் மோதாமலும், மீட்கப்படாமலும் இருந்தால், அது சுமார் 300 ஆண்டுகளில்கோட்பாட்டு ரீதியாகக் கூறப்படும் ஊர்ட் மேகத்தை அடையும் என்றும், அதைக் கடந்து செல்ல சுமார் 30,000 ஆண்டுகள் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்க தகட்டில் இடம் பெறாத தமிழ்
எதிர்காலத்தில் இந்த விண்கலத்தை வேற்றுகிரகவாசிகள் அணுக முடிந்தால், பூமியை பற்றி அறிந்து கொள்ள 30 சென்டிமீட்டர் விட்டமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தட்டில் ஒலி - ஒளி கோப்புகள் உள்ளது.

இதில், பூமியில் வாழும் உயிரினங்களின் 115 படங்கள், திமிங்கலம் பாடுவது, குழந்தைகளின் சிரிப்பு, அழுகை போன்ற பூமியில் வாழும் உயிரினங்களின் 35 ஒலிகள், 55 மொழிகளில் வாழ்த்துச் செய்திகள், மொஸார்ட், பிளைண்ட் வில்லி ஜான்சன் ஆகியோரின் 90 நிமிட இசை, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் மற்றும் அப்போதைய ஐ.நா பொதுச்செயலாளர் கர்ட் வால்ட்ஹெய்ம் ஆகியோரின் பதிவு செய்யப்பட்ட வாழ்த்துச் செய்திகள் இடம் பெற்றுள்ளது.
55 மொழிகளில் அனுப்பட்ட வாழ்த்து செய்தியில், ஹிந்தி, மராத்தி, ராஜஸ்தானி, வங்காளம், உருது, பஞ்சாபி, ஒரியா, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகள் இடம் பெற்றிருந்தாலும், பாரம்பரிய சிறப்பு கொண்ட தமிழ் மொழி இடம் பெறவில்லை.