Samsung, Sony, LG -யுடன் போட்டி போட்ட Vu நிறுவனத்தின் மதிப்பை ரூ.1,000 கோடியாக மாற்றிய ஒற்றை பெண்!
வியு (Vu) குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் தேவிதா ஷராப்பை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
யார் இவர்?
இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் உள்ள மும்பையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ஷராப். இவர், ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் என்ற தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்கு தேவிதா ஷராப் என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இதில், ராஜ்குமார் ஷராப் தனது மகன் மற்றும் மகள் தேவிதா ஷராப்பை சிறு வயதில் இருந்தே அலுவலகங்கள், ஆலைகள் மற்றும் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால், தேவிதா ஷராப் தனது 16 வயதிலேயே வர்த்தக நுணுக்கங்களை கற்று தந்தையின் வர்த்தகத்திற்கு உதவி புரிந்தார்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் தேவிதா ஷராப் படித்தார். இவர் படிக்கும் காலங்களிலே உலகத்தில் உள்ள நிறுவனங்களுடன் போட்டியிட நினைத்தால் தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருக்க கூடாது என்பதை புரிந்து கொண்டார்.
வியு டெலிவிஷன்ஸ்
தேவிதா ஷராப் தனது 25 -வது வயதிலேயே 2006 -ம் ஆண்டில் வியு டெலிவிஷன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அப்போது டிவி மற்றும் CPU கலந்த ஒரு அட்வான்ஸ்டு டிவியை தயாரித்தார். இந்த டிவியில் YouTube, OTT தளங்களை எளிதில் பயன்படுத்த முடியும்.
இந்த அட்வான்ஸ் டிவியானது முதலில் மக்களிடம் பிரபலமடையவில்லை. இருந்தாலும் 8 ஆண்டுகள் காத்திருந்து 2014-ம் ஆண்டு இவரது வர்த்தகம் பூஜ்ஜியத்திலிருந்து ரூ.30 கோடி வரை உயர்ந்தது.
இதனைத்தொடர்ந்து தேவிதா ஷராப் தனது நிறுவனத்தின் லாபத்தை ஈட்டுவதற்கு Samsung, Sony, LG போன்ற நிறுவனங்களுடன் போட்டி போட ஆரம்பித்தார். இதனால் அவரது பிராண்ட் பிரீமியத்தை உருவாக்கி லாபத்தை எட்டியது.
தற்போது, 2014 -ம் ஆண்டுக்கு பிறகான 4 ஆண்டுகளில் வியு டெலிவிஷன்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,000 கோடியை தாண்டியது.
இதனிடையே, 2019 -ம் ஆண்டு பார்ச்சூன் இந்தியா வெளியிட்ட இந்தியாவின் சக்தி வாயந்த 50 பெண்கள் பட்டியலில் தேவிதா ஷராப் பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருடைய சொத்து மதிப்பு மட்டும் ரூ.1,800 கோடியாகும். இவருடைய நிறுவனத்தில் இதுவரை 30 லட்சம் டிவிக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |