IELTS தேர்வு குறித்த சில விடயங்களை அறிந்துகொள்வோமா?
IELTS தேர்வு என்பது உலகிலேயே மிகப் பிரபலமான, அதிக சவால்கள் நிறைந்த ஆங்கில மொழித் தேர்வு ஆகும்.
இந்த கட்டுரையில் IELTS தேர்வு குறித்த சில விடயங்களை அறிந்துகொள்ளலாம்.
முதலாவது, நீங்கள் எதற்காக IELTS தேர்வு எழுதுகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்.
அடுத்து, நீங்கள் கணினியில் IELTS தேர்வு எழுதுகிறீர்களா அல்லது காகிதத்திலா என்பதை தேர்வு செய்துகொள்ளவேண்டும்.
உங்களது தற்போதைய ஆங்கில அறிவு எந்த அளவில் உள்ளது என்பதை உறுதி செய்துகொண்டு, உங்களுக்குத் தேவையான மதிப்பெண்களைப் பெறுவதற்கு, உங்கள் மொழித்திறனை மேம்படுத்த எவ்வளவு காலம் கற்கவேண்டும் என்பதை சரியாக கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
IELTS தேர்வின் வடிவமைப்பைக் (format) குறித்து தெளிவாக அறிந்துவைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். அதுதான் முதல் படியும் கூட...
IELTS தேர்வு எவ்வளவு நேரம் நடைபெறும், அதில் எத்தனை பகுதிகள் உள்ளன, எவ்வகைக் கேள்விகள் கேட்கப்படும் ஆகியவற்றை அறிந்துவைத்திருப்பது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அதற்காக, முன்கூட்டியே, முந்தைய IELTS தேர்வுகளில் கேட்கப்பட்ட மாதிரி வினாக்களுக்குப் பதிலளித்துப் பழகுவது பயன்தரும்.
IELTS கவனிக்கும் தேர்வில் (IELTS Listening test), கேள்விகளை ஒரு முறை கவனித்துக் கேட்பதற்கு, ஒடியோ துவங்குவதற்கு முன்னதாகவே சிறிது நேரம் கொடுக்கப்படும். அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்வது பலனளிக்கும். முக்கியமான விடயங்களை குறிப்பெடுத்துக் கொள்ளலாம்.
கவனித்து தேர்வு எழுதுவதற்கு பயிற்சியும் தேவை. ரேடியோ அல்லது தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகள் முதலானவற்றைக் கவனிப்பது நலம் பயக்கும்.
IELTS வாசிக்கும் தேர்வில் ( IELTS Reading test), நீங்கள் சுமார் 2,700 வார்த்தைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும், ஒரு மணி நேரத்தில் 40 கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டியிருக்கும். ஆகவே, அதற்கேற்றாற்போல் நேரத்தை கவனமாக பயன்படுத்துவது நல்லது.
IELTS Academic writing என்ற பகுதியைப் பொருத்தவரை, தெளிவான முகவுரை, மையப்பகுதி மற்றும் முடிவுரை என்ற வடிவில் அது அமைந்திருக்கும்.
IELTS பேசும் தேர்வில், நீங்கள் தேர்வின் மூன்று பகுதிகளையும் குறித்து பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும். மாதிரி தேர்வுகளை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு, அவற்றில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களை பேசி, பதிவு செய்து, அதை மீண்டும் கேட்டுப்பார்ப்பது, நீங்கள் சரியாகச் செய்கிறீர்களா, இன்னமும் முன்னேற்றம் தேவையா என்பதைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.