சுவிட்சர்லாந்தில் வேலை செய்ய விருப்பமா? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
சுவிட்சர்லாந்தில் வேலை கிடைப்பது எளிதாகலாம் என ஒரு தகவல் வெளியாகி, சுவிஸ் கனவில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, வரும் ஆண்டுகளில் சுவிஸ் வேலை சந்தையில் பெருமளவில் தட்டுப்பாடு ஏற்படும் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். வேலையிலிருப்போர் ஓய்வு பெறுதல், மற்றும் வலிமையான பொருளாதாரம் காரணமாக இலட்சக்கணக்கான காலியிடங்கள் உருவாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தற்போது சுவிட்சர்லாந்தில் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே செல்ல, தகுதி படைத்த பணியாளர்கள் கிடைப்பது குறைந்துகொண்டே வருகிறதாம்.
அத்துடன், சுவிட்சர்லாந்தில் பணி ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை, புதிதாக பணியில் இணைவோரின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாம்.
2025 வாக்கில், சிறப்புப் பணியாளர்கள் எண்ணிக்கையில் 365,000 வரை பற்றாக்குறை ஏற்படலாம் என கணிக்கிறார் வேலைவாய்ப்பு அலுவலகம் ஒன்றின் இயக்குநரான Tino Senoner என்பவர்.
பணியாளர் தட்டுப்பாடு காரணமாக 2025இல் மட்டுமே சுவிஸ் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 60 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் இழப்பு ஏற்படலாம் என்கிறார் அவர்.
அதே நிலை நீடிக்குமானால், 2035 வாக்கில் 1.2 மில்லியன் திறன்மிகு பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்.
எந்தெந்த துறைகளில் தட்டுப்பாடு ஏற்படும்?
சுவிஸ் பொருளாதாரத்தின் அனைத்துப் பகுதிகளிலுமே தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படலாம் என்றாலும், குறிப்பாக, மருத்துவம், தயாரிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் கடும் தட்டுப்பாட்டை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமே அதிக பணியிடங்கள் இருக்கும் என்று கூறிவிடமுடியாது. தாழ் திறன் பணியிடங்களான விருந்தோம்பல் துறை, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளிலும் பெருமளவில் பணியாளர்கள் தேவை ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆக, இலட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படவேண்டியுள்ளதால், சுவிட்சர்லாந்தில் பணி செய்ய அனுமதியுள்ளவர்கள் குறிப்பாக தகுதி படைத்த திறன்மிகு பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஆஃபர்கள் குவிய இருக்கின்றன.
அப்புறம் என்ன? சுவிட்சர்லாந்தில் வேலை செய்ய ஆசையுள்ள தகுதி படைத்தவர்கள், தங்கள் கனவுகளை நிஜமாக்கிக்கொள்ள முழுமூச்சாக முயற்சியில் இறங்கவேண்டியதுதான்!