மறக்க முடியாத சச்சின் - ஷேன் வார்ன் மோதல்கள் : நெகிழ்ந்து போகும் ரசிகர்கள்
அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு சச்சினுமான கள மோதல் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சினும், தலைசிறந்த பவுலரான ஷேன் வார்னேவும் களத்தில் மோதிய ஆட்டங்கள் சுவாரஸ்யமாக இருந்துள்ளது. சிட்னியில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் ஆட்டத்தில் களமிறங்கிய ஷேன் வார்ன் பந்தை முதல் ரவுண்டில் சச்சின் விளாசி தள்ளி 148 ரன்கள் குவித்தார்.
இரண்டாவது ரவுண்டில் 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அப்போது களம் கண்ட சச்சின் வார்ன் ஓவரை அடிக்க முடியாமல் திணறினார். இப்போட்டியில் 90 ரன்கள் சச்சின் விளாசிய நிலையில், வார்ன் 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.
பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வார்னேவின் அபார பந்துவீச்சால் இந்தியா 257 ரன்களில் சுருண்டது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் வார்னேவின் யுக்தியை கண்டுபிடித்த சச்சின் 2வது இன்னிங்ஸில் அவரது பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார். 191 பந்துகளில் சச்சின் 155 ரன்கள் விளாசிய நிலையில் அதுவரை டெஸ்ட்டில் வார்னேவை அப்படி யாரும் அடித்தது இல்லை எனலாம்.
இதனைப் பார்த்த கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேன் அப்போதைய சிறந்த கிரிக்கெட் வீரர்களாக விளங்கிய சச்சின், வார்னேவை தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.