அப்பா, அவரை மாதிரி ஏன் சிக்ஸர் அடிக்கல? கேட்கும் வார்னர் மகள்கள்
ஜோஸ் பட்லரை போல ஏன் நீங்கள் பந்தை வெளியே விரட்டவில்லை என்று தனது மகள்கள் கேள்வி கேட்பதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் 30 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்.
போட்டிக்கு பின்னர் வார்னர் தனது மகள்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, 'பந்துவீச்சாளர்கள் தங்களது பணியை அருமையாக செய்தனர். இதனால் எங்களது வேலை எளிதாகிவிட்டது. அவர்களுக்கே எல்லா பெருமையும் சாரும். ஜோஸ் பட்லர் போல் என்னால் ஏன் சதம் அடிக்க முடியவில்லை? என்பதை அறிந்துகொள்ள எனது குழந்தைகள் விரும்புகிறார்கள். ஆனால் இது எளிதான விடயமல்ல. தற்போதைய நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டில் 60 ஓட்டங்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது.
ஜோஸ் பட்லர் சதம் அடித்த ஆட்டங்களை எனது 3 மகள்களும் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். அதன் பிறகு அவரை போல் மைதானத்திற்கு வெளியே செல்லும் வகையில் மெகா சிக்ஸர் அடிக்காதது ஏன்? என்று என்னிடம் தொடர்ந்து கேள்விகளை கேட்கிறார்கள். கிரிக்கெட் ஆட்டத்தை எனது மகள்கள் பார்ப்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் நடப்பு தொடரில் இரண்டு சதம், இரண்டு அரைசதம் அடித்து மிரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.