பின்வாங்கினார் மேக்ரான்... பிரான்ஸ் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானிய கடல் பரப்பில் மீன் பிடிக்க, பிரான்ஸ் படகுகளுக்கு உரிமம் வழங்கும் பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் இருந்துவரும் நிலையில், நேற்று நள்ளிரவு 12.00 மணியிலிருந்து பிரித்தானியா மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் துவங்கும் என்று பிரான்ஸ் தரப்பு மிரட்டல் விடுத்திருந்தது.
ஆனால், பழிவாங்குவதாக தெரிவித்திருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், திடீரென பின்வாங்கியிருக்கிறார்.
மேக்ரான் விதித்திருந்த காலக்கெடு முடிவடைவதற்கு சில மணி நேரத்திற்கு முன், பிரான்ஸ் தரப்பு பிரித்தானியாவுக்கு எதிராக அறிவித்திருந்த பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்காது என்றும், மீண்டும் இன்று (செவ்வாய்) முதல் பேச்சுவார்த்தைகளைத் துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான விவாதங்கள் தொடரும் என்று கூறிய மேக்ரான், பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது தடைகள் விதிக்கப்போவதில்லை என்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Liz Truss, மேக்ரான் அச்சுறுத்தியபடி நடவடிக்கையில் இறங்கினால், பிரித்தானிய அரசு பிரான்சுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
மறுபக்கம், இப்போதைக்கு இரு தரப்பினரும் அமைதியாக இருப்பதாக தோன்றினாலும், பிரான்ஸ் மீனவ கமிட்டி ஒன்றின் தலைவரான Olivier Lepretre, ஒருவேளை பிரித்தானிய தரப்பு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கலாம் என தான் அஞ்சுவதாகவும், மீண்டும் பிரச்சினை ஏற்படுமானால் பிரான்ஸ் படகுகள் பிரித்தானிய கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.