அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் படுகொலை: அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்
வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் யூத அருங்காட்சியகத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர விசாரணை
குறித்த தாக்குதல் சம்பவத்தை யூத எதிர்ப்பு பயங்கரவாதச் செயல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் விவரித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவமானது FBI அமைப்பின் வாஷிங்டன் கள அலுவலகத்திலிருந்து சில அடிகள் தொலைவில் நடந்துள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றும், உள்ளூர் அதிகாரிகளுடன் பெடரல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து வருகின்றனர் என தமது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை, ஆனால் இரண்டு நபர்களும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரக பணியுடன் தொடர்புடையவர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், இஸ்ரேலிய தூதரகம் சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், தாக்குதல் நடந்த நேரத்தில் தூதர் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்ததாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வாஷிங்டன் டிசி பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மட்டுமின்றி, யூத அருங்காட்சியகத்தைச் சுற்றி, சம்பவப் பகுதியை பாதுகாத்து வருவதாகவும், சாட்சிகள் மற்றும் கமெரா காட்சிகளைத் தேடி வருவதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது யூத அருங்காட்சியகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன் ஆகியோர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |