ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலை போகக்கூடிய வீரர்கள் இவர்கள் தான் - பிரபல வீரர் கணிப்பு
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலை போகக்கூடிய வீரர்கள் குறித்து முன்னாள் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது.
2018க்கு பின் முதல் முறையாக மெகா அளவில் நடைபெற உள்ள இந்த ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக ரசிகர்கள் நேரடியாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலை போகக்கூடிய வீரர்கள் குறித்து தனது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற தன்னை நிரூபித்துள்ள டேவிட் வார்னர் கடந்தாண்டு நடந்த கசப்பான சம்பவங்களுக்கு பதிலடி கொடுப்பார் என்பதால் இந்த பட்டியலில் அவர் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2வதாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டந்த 2 வருடங்களாக ஆஸ்திரேலியா மற்றும் அனைத்து விதமான டி20 போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அவர் அபாரமாக செயல்பட்டதாக வாட்சன் காரணம் தெரிவித்துள்ளார்.
3வதாக இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றுள்ளார். தனது திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ள அவர் கேப்டன்ஷிப் செய்வதற்கான தகுதிகளை பெற்றுள்ளதாகவும் வாட்சன் பாராட்டியுள்ளார்.
4வதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் யூஸ்வேந்திர சாஹல் இடம் பெற்றுள்ளார். மிடில் ஓவர்களில் அபாரமாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளை எடுக்கும் வல்லமை பெற்றவர் என சாஹல் பாராட்டப்பட்டுள்ளார்.
5வதாக எந்த ஒரு இடத்திலும் சிறப்பாக பந்து வீசும் திறமையை தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா இடம் பிடித்துள்ளார்.
ஆனால் கடைசி நேரத்தில் மேலும் பல வீரர்கள் தங்கள் திறமைகளை காட்டியுள்ளதால் மெகா ஏலத்தில் பல எதிர்பாராத சம்பவங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.