அவமானமாக தோன்றும்.. தோனிக்கு கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்தது குறித்து முன்னாள் வீரர் கருத்து!
ஜடேஜா தனது கேப்டன் பதவியை தோனிக்கு விட்டுக்கொடுத்தது குறித்து சென்னை அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஜடேஜா தலைமையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. மேலும் ஜடேஜாவின் ஆட்டமும் சிறப்பாக அமையவில்லை. இதனால் தனது கேப்டன் பதவி விட்டு அவர் விலகினார்.
அத்துடன் தோனியை மீண்டும் பொறுப்பேற்கமாறு கூறினார். அதனைத் தொடர்ந்து தோனி தற்போது சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஜடேஜா கேப்டன் பதவியை விட்டு விலகியது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் கூறுகையில், 'முதன் முதலில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜா ஏற்றார் என்றவுடன் எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. ஏனென்றால் தோனியை பற்றி அனைவருக்கும் தெரியும். மைதானத்தில் அவரது கட்டுப்பாடு, மரியாதை மற்றும் பிற வீரர்களுக்கு தலைவனாக அவர் அளிக்கும் உத்வேகம் ஆகியவை மிகப்பெரியது. ஜடேஜாவிற்கு அந்த இடத்தை ஈடு செய்வது கடினம். அது அவருக்கும் தெரியும்.
முதலில் தோனி காயம் அல்லது ஓய்வு காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக நினைத்தேன். பிறகு இது ஜடேஜாவிற்கு தரப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு என தெரிந்தது. ஆனால் தோல்விக்கு பிறகு அவர் பதவி விலகியது வருத்தமாக இருந்தது. ஏனென்றால் அவர் சிறந்த வீரர், நுட்பம் வாய்ந்த விளையாட்டை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர். ஆனால் பொதுவில் இதுபோன்ற நிலையில் ஜடேஜாவை வைத்து பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.
அவர் கேப்டன் பதவியை துறப்பதாக சொல்லியிருக்க கூடாது. ஆனால் அவர் மீண்டும் தோனிக்கு தலைமையை கொடுத்தது சரி என்று தான் தோன்றுகிறது. ஏனென்றால் கேப்டனாக இருக்கும் ஒருவர் தன் பொறுப்பை மற்றொரிடம் தருகிறார் என்றால் அது உங்களுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுக்கும்.
பொது இடத்தில் வைத்து உங்களை அவமானப்படுத்தியது போல தோன்றும். நான் ராஜஸ்தான் அணி கேப்டன் பதவியை விட்டு விலகும் போது அப்படி தான் நினைத்தேன். இவை அனைத்தும் இருந்தும் ஜடேஜா கேப்டன் பதவியை விட்டு விலகியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது' என தெரிவித்துள்ளார்.