புரட்டிப்போட்ட நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 122 என உயர்வு: 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மூன்று நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் மாயமாகியுள்ள நிலையில், இதுவரையான பலி எண்ணிக்கை 122 என தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்பாராத நிலச்சரிவு
சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து பெய்த பேய் மழையை அடுது மூன்று பகுதிகளில் எதிர்பாராத நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ராணுவமும் களமிறங்கியுள்ளனர்.
தொடர்ந்து 20 மணி நேர மீட்பு நடவடிக்கைகளை தற்போது முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். ஆனால் நாளை அதிகாலை மீண்டும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 122 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 116 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மரணமடைந்தவர்களுக்கு தலா ரூ 2 லட்சம் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 உதவித்தொகையும் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
Priyanka and I were scheduled to visit Wayanad tomorrow to meet with families affected by the landslide and take stock of the situation.
— Rahul Gandhi (@RahulGandhi) July 30, 2024
However, due to incessant rains and adverse weather conditions we have been informed by authorities that we will not be able to land.
I…
இதனிடையே, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா ஆகியோர் வயநாடு மக்களை சந்திக்கும் பொருட்டு புறப்பட்ட தயாரான நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை முன்னறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில நிர்வாகம் அவர்கள் பயணத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
இருப்பினும், நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, கேரள பேரிடருக்கு உரிய நிதியுதவி அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை மற்றும் நூல்புழா ஆகிய பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் மொத்தமாக சேதமடைந்துள்ளதாகவும்,
பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், பல கிராமங்கள் மொத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகொப்டர் வசதியும் பயன்படுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்றும் இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |