நாங்களும் பாதிக்கப்பட்டோம்..! இனி ஏற்க முடியாது.. இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஆதங்கததை கொட்டிய தமிழக வீரர்
இனவெறி தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் தமிழக வீரர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, சிட்னி மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் இனவெறி தாக்குதலுக்கு ஆளானார்கள். இதுகுறித்து கேப்டன் ரஹானே நடுவர்களிடம் புகார் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்த பிசிசிஐ-யும் புகார் அளித்ததை அடுத்து சம்பவம் குறித்து 14 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி பொறுப்பு வழங்கியது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தின் போது எல்லைக் கோட்டிற்கு அருகே சென்ற இந்திய வீரர் சிராஜை அங்கிருந்த ரசிகர்கள் இனவெறி ரீதியில் திட்டியுள்ளனர்.
இதுகுறித்து சிராஜ் நடுவர்களிடம் புகார் அளிக்க போட்டி 10 நிமிடம் நிறுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியலிருந்த ரசிகர்கள் 6 பேர் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து, இச்சம்பவத்திற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வருத்தம் தெரிவித்தது. நான்காம் ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வீரர் அஸ்வின் கூறியதாவது, 'நான் ஆஸ்திரேலியாவுக்கு 4-வது முறையாக வருகிறேன். கடந்த காலங்களில் குறிப்பாக சிட்னியில் பலமுறை இனரீதியான வார்த்தைகளை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். இரண்டு மூன்று சமயங்களில் வீரர்கள் கோபப்பட்டு எதிர்வினையாற்றியதால் பிரச்சினையில் சிக்கினர். இந்த பிரச்சினைக்கு காரணம் வீரர்கள் அல்ல, மைதானத்தின் கீழ் பகுதியில் இருக்கும் கும்பல் பயன்படுத்தும் வார்த்தைகளால் தான். இந்த முறை எல்லை மீறி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த காலத்தில் இது போன்ற இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கவிடாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்' என அஸ்வின் தெரிவித்துள்ளார் .
This must be dealt with an iron fist and we must make sure it doesn't happen again - @ashwinravi99 on the racial abuses being hurled at India players at the SCG#AUSvIND pic.twitter.com/Rlv9hMIHVq
— BCCI (@BCCI) January 10, 2021