மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்: எச்சரிக்கும் சுவிஸ் அரசியல் கட்சிகள்
சுவிட்சர்லாந்தில் இன்னும் இரண்டு வாரத்தில் கொரோனா பரவல் உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுவிஸ் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி.கட்சியின் தேசிய கவுன்சிலர் முன்வைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் ஓமிக்ரான் பரவல் அடுத்த இரண்டு வாரங்களில் உச்சம் தொட வாய்ப்பிருப்பதாக தேசிய கொரோனா அறிவியல் பணிக்குழுவின் தலைவர் Tanja Stadler தெரிவித்துள்ளார்.
இதனால் ஒரே வாரத்தில் 2.5 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நிலை உருவாகும். இருப்பினும் பெடரல் நிர்வாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முன்னெடுத்த நடவடிக்கைகளையே தற்போதும் பின்பற்றுவதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, இதே முன்னேற்பாடுகளை எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் மாநிலங்களும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளது. அத்துடன், தடுப்பூசி சான்றிதழ்களின் காலாவதியை 270 நாட்களாக குறைத்துள்ளதுடன், தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு நாட்களை தலா 5 எனவும் திருத்தியுள்ளது.
இந்த நிலையிலேயே எஸ்.பி கட்சியின் தேசிய கவுன்சிலர் Barbara Gysi, சுவிஸ் மக்கள் கவனமாக இருக்க வேண்டிய கட்டத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய நடவடிக்கைகள் மூலம் எதிர்வரும் தொற்றுநோய்களை சுவிஸ் நிர்வாகம் எவ்வளவு சிறப்பாக கடந்து செல்லும் என்று கணிப்பது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெடரல் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை ஆனால் சமூக ஊடக பயனர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.