எங்களுக்கு அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோர் வேண்டும்... கனேடிய மாகாணம் ஒன்று முன்வைக்கும் திட்டம்
கனேடிய மாகாணம் ஒன்றின் பிரீமியர், தங்கள் மாகாணத்துக்குக் கூடுதல் புலம்பெயர்ந்தோர் வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்தந்த மாகாணத்தின் புலம்பெயர்தலை அந்தந்த மாகாணமே கட்டுப்படுத்த ஆலோசனை.
கனடாவின் Saskatchewan மாகாண பிரீமியரான Scott Moe, தங்கள் மாகாணத்துக்கு அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோர் வேண்டும் என்று கூறியுள்ளார்.
Saskatchewan மாகாண புலம்பெயர்தல் அமைச்சரான Jeremy Harrison ஏற்கனவே பெடரல் அரசுக்கு ஒரு ஆவணத்தை அனுப்பியுள்ளதாகவும், அதில், தங்கள் மாகாண புலம்பெயர்தலை தாங்கள் கட்டுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக Scott Moe தெரிவித்தார்.
முதலாவது, எங்களுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் வேண்டும்,
இரண்டாவது, புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையின்மீது நாங்கள் கூடுதல் தாக்கம் செலுத்த விரும்புகிறோம்,
மூன்றாவது, இந்த புலம்பெயர்ந்தோர் எங்கிருந்து வந்தாலும் சரி, அவர்களுக்கு தேவையான பயிற்சி கிடைக்கவும், எங்கள் சமூகத்தின் பங்களிக்கும் உறுப்பினர்களாக அவர்களை மாறுவதற்கு என்னென்ன தேவையோ, அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும் வகையில், மற்ற மாகாணங்களுடனும் இணைந்து செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார் அவர்.
இந்நிலையில், புலம்பெயர்தல் ஆலோசகரான Marlou Poquiz என்பவர், தங்கள் மாகாணத்தின் நிலை என்ன என்பது அந்தந்த மாகாணங்களுக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும் என்பதால், அந்தந்த மாகாணத்துக்குத் தேவையான புலம்பெயர்வோரை எளிதாக தேர்ந்தெடுக்க அந்தந்த மாகாணத்துக்கு கூடுதல் அனுமதியளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு பணியாளர் தட்டுப்பாடு பிரச்சினையை புலம்பெயர்தல் மூலம் தீர்ப்பதுதான், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என தான் நம்புவதாக தெரிவிக்கிறார் அவர்.