”எம் உறவுகளுக்காக” கனேடிய நகரம் ஒன்றில் வாழும் இலங்கையர்களின் கண்ணீர் பேட்டி
இலங்கையில் தொடரும் அமைதியின்மை காரணமாக, கனடாவின் மொன்றியலில் வாழும் இலங்கையர்கள் தங்கள் உறவினர்களைக் குறித்து கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
2019இல் தான் தன் தாய்நாடான இலங்கைக்கு சென்றிருந்தபோது மக்கள் அமைதியாக வாழ்ந்துவந்தார்கள் என்கிறார் மொன்றியலில் வாழும் Prab Shan.
இலங்கையில் மூன்று மாதங்களாக நிலவிவரும் எரிபொருள், உணவுப்பொருட்கள், மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பட்டைத் தொடர்ந்து, தலைநகரில் மக்கள் தாங்கள் நிராகரித்த ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வீடுகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வமாக அவர்கள் ராஜினாமா செய்யும் வரை தங்கள் நிலைப்பாடு தொடரும் என்று அவர்கள் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இலங்கையில் நடப்பனவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் Prab Shan போன்ற மொன்றியல் வாழ் இலங்கையர்கள், இலங்கையில் வாழும் தங்கள் மக்கள் சந்தித்து வரும் துயரங்களைக் குறித்து கவலையடைந்துள்ளார்கள்.
மொன்றியலிலுள்ள Ahuntsic-Cartierville பகுதியில் வாழும் Our Lady of Deliverance கத்தோலிக்கத் திருச்சபையின் Father ஆண்ட்ரூ துரைசிங்கம் (Andrew Thuraisingam), தன் தாய்நாடு சந்தித்துவரும் துயரங்களைக் கண்டு தான் மனம் வருந்துவதாக தெரிவிக்கிறார்.
மொன்றியலில் வாழும் இலங்கையர்களிடமிருந்து உதவி பெற்று, இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவ முயன்றுவருவதாக தெரிவிக்கும் துரைசிங்கம், ஆனால் அது போதுமானதல்ல என்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் தாங்கள் ஆராதனைக்காக கூடும்போது, தொடர்ந்து இலங்கையிலிருக்கும் மக்களுக்காக பிரார்த்தனை செய்துவருவதாக தெரிவிக்கிறார் அவர்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்து வருகிறது சுபிதா தர்மகுலசாகரமுடைய (Subitha Tharmakulasagaram) குடும்பம். அவர்களுக்கு உதவுவதற்காக மொன்றியலில் வாழும் தான் பணம் அனுப்பி வருவதாக தெரிவிக்கும் சுபிதா, தான் அவர்களுடைய உடல் நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
எங்களால் அவர்களுக்கு பணம் அனுப்ப முடிகிறது, எங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு முயற்சி செய்து உதவ முடிகிறது, ஆனால், பணம் இப்போது ஒன்றுமில்லை என்றாகிவிட்டது என்கிறார் சுபிதா.
வாங்க எதுவுமே இல்லாத நிலையில், பணத்தை வைத்து எதை வாங்குவது என கேள்வி எழுப்புகிறார் அவர்.
ஆனாலும், எல்லாம் ஒருநாள் சரியாகும் என உறுதியாக நம்புகிறார் சுபிதா. மீண்டும் ஒளியைக் காண்போம் என்று கூறும் அவர், மீண்டும் வருவோம், மீண்டு வருவோம் என்கிறார்.