என் தாய் டயானாவின் பணம் இருந்ததால்தான் தப்பினோம்: ஓபரா பேட்டியில் தாங்கள் கனடாவிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை வெளியிட்ட ஹரி
பிரித்தானிய இளவரசர் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதும், முதலில் அவரது குடும்பம் கனடாவுக்குத்தான் சென்றது.
ஆனால், கனடாவில் யார் அவருக்கு பாதுகாப்புக்கான பணத்தைக் கொடுப்பது என்ற ஒரு விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில், ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறிய ஒருவருக்காக தங்கள் வரிப்பணம் செலவிடப்படுவதற்கு பிரித்தானிய மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.
கனடா மக்களும் தங்கள் பணத்தை ஹரி குடும்பத்துக்காக செலவிட எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில், தற்போது ஓபராவின் பேட்டியில், தாங்கள் கனடாவிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார் ஹரி.
தான் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறியதால், தனக்கு நிதியுதவி வழங்குவதை தனது குடும்பத்தினர் முற்றிலும் நிறுத்திவிட்டதாகவும், ஒரு ராஜ குடும்ப உறுப்பினர் என்ற முறையில் தனக்கு எப்போதுமே ஆபத்து உள்ளது என்பதால், பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாகவே வேறு வழியில்லாமல், கனடாவிலிருந்து தனது குடும்பம், சொல்லப்போனால், தப்பியோடியதாகவும் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார் ஹரி.
தனது குடும்பத்தாரிடமிருந்து உதவி முற்றிலும் நிறுத்தப்பட்ட அந்த நேரத்தில், தனது தாய் டயானா தனக்கு விட்டுச் சென்றிருந்த பணம்தான் தனக்கு உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார் ஹரி.
அத்துடன், அப்போது, இதுபோல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திட்டம் எதுவும் தங்கள் வசம் இல்லை என்றும், நண்பர் ஒருவர் நீங்கள் ஏன் அதைச் செய்யக்கூடாது என கேட்டதாகவும், அதன் பின்னரே பணத்துக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முடிவை எடுத்ததாகவும் ஹரி தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவுக்கு தாங்கள் குடிபெயர்ந்ததும், ஹாலிவுட்டைச் சேர்ந்த Tyler Perry என்பவர் தங்களுக்கு ஒரு வீட்டையும் வாடகைக்குக் கொடுத்து, தங்கள் பாதுகாப்புச் செலவையும் பொறுப்பெடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் ஹரி.
இது குறித்து பேசிய மேகன், ஹரியின் பாதுகாப்பு விலக்கப்பட்டதும், தான் அரண்மனைக்கு கடிதங்கள் எழுதி ஹரியின் பாதுகாப்பை தொடருமாறு கோரியும், அது சாத்தியமில்லை என தனக்கு பதில் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
