செடிகளுக்கு அல்ல பிணங்களுக்கு நீர் பாய்ச்சியிருக்கிறோம்... கனேடியரால் கொன்று புதைக்கப்பட்ட இலங்கையர் குறித்து பேசியுள்ள பெண்
கனடாவில், இலங்கையர்கள் இருவர் உட்பட எட்டு பேரை துஷ்பிரயோகம் செய்து, கொன்று கூறுபோட்டு புதைத்த சிரியல் கில்லர் குறித்து பெண் ஒருவர் தற்போது பேசியுள்ளார்.
இலங்கையர்களான ஸ்கந்தராஜ் நவரத்னம் மற்றும் கிருஷ்ணா கனகரத்னம் உட்பட எட்டுபேர் மாயமான வழக்கில், கனேடியரான ப்ரூஸ் மெக் ஆர்தர் (65) என்பவர் கைது செய்யப்பட்டார், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆர்தரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கார்கள், கேரன் ஃப்ரேஸரும் அவரது கணவரான ரான் ஸ்மித்தும்.
பிரம்மாண்ட தோட்டங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்தர், தன் இயந்திரங்களை கேரன் வீட்டுத் தோட்டத்தில் வைக்க அனுமதி கேட்டுள்ளார்.
பதிலுக்கு கேரன் வீட்டுத் தோட்டத்தை தான் பண்படுத்துவதாக அவர் கூற, ஜென்டில்மேனாக காட்சியளித்த ஆர்தரின் வார்த்தைகளை நம்பிய கேரன் தம்பதி அதற்கு சம்மதித்துள்ளார்கள்.
ஒரு நாள் பொலிசார் கேரன் வீட்டுக் கதவைத் தட்டி, அவரது வீட்டுத்தோட்டத்தை சோதனையிட அனுமதி கேட்டுள்ளார்கள்.
அப்போது ஓரினச்சேர்க்கை கிராமம் ஒன்றில் எட்டு பேரைக் காணவில்லை என கனடாவே பரபரப்பாக இருந்துள்ளது.
அந்த நேரத்தில், தாங்கள் ஆர்தரை கைது செய்துள்ளதாகவும், அது தொடர்பாகவே தோட்டத்தை சோதனையிட விரும்புவதாகவும் பொலிசார் கூற, இல்லவே இல்லை ஆர்தர் அப்படிப்பட்டவர் இல்லை என்று அடித்துக்கூறியிருக்கிறார் கேரன்.
ஆனால், ஓரினச்சேர்க்கையாளரான ஆர்தர் எட்டு பேர் கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவரவே, அதிர்ந்துபோய் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள் கேரனும் அவரது கணவரும்.
பொலிசார் கேரனின் வீட்டுத் தோட்டத்தை அங்குலம் அங்குலமாக ஆராய, அங்கு ஏழு உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு, புதைக்கப்பட்டு, அதன் மேல் செடிகள் வளர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அந்த உடல்கள் அனைத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். எட்டாவது உடல் அருகிலுள்ள மலைப்பகுதியில் ஒரு பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்னவென்றால், கேரன் வீட்டுத்தோட்டத்தை பண்படுத்துவதாக கூறியிருந்த ஆர்தர், அங்கே தான் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்து துண்டுகளாக்கிய உடல்களை புதைத்து, அவற்றின் மீது செடிகளை நட்டிருக்கிறார்.
நாங்கள் இவ்வளவு நாள் நீர்ப்பாய்ச்சியது செடிகளுக்கல்ல, பிணங்களுக்கு என தெரியவரவே அதிர்ந்துபோனதாக தெரிவிக்கிறார் கேரன்.
ஆர்தர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரால் கொல்லப்பட்டதாக பொலிசார் அடையாளம் கண்டுள்ள இருவரை தான் சந்தித்ததை நினைவுகூருகிறார் கேரன்.
அவர்கள் இலங்கையரான ஸ்கந்தராஜ் நவரத்னம் மற்றும் மஜீத் கேய்ஹன் ஆகியோர்.
அவர்கள் இருவரும் ஆர்தரின் தோட்டத்தில் தோட்டவேலை செய்தபோது அவர்களை பார்த்திருக்கிறார் கேரன்.
ஸ்கந்தராஜ் நவரத்னம் மிகவும் கவர்ச்சியானவர் என்று கூறும் கேரன், அவரை பார்க்கும் யாரும் அவரால் வசீகரிக்கப்படுவார்கள், அவ்வளவு அழகான புன்னகை அவருக்கு, எப்போதும் நேர்த்தியாக உடையணியும் ஸ்கந்தராஜ் நவரத்னம், எப்போதும் பெரிதாக சிரிப்பவர் என்று கூறும் கேரன், ஆனால், அதற்குப் பிறகு அவரை தான் பார்க்கவேயில்லை என்கிறார்.
ஸ்கந்தராஜ் நவரத்னம் மட்டுமல்ல, காணாமல் போனதாக கருதப்பட்ட கிருஷ்ணா கனகரத்னத்தில் உடலும் கூறு போடப்பட்ட நிலையில், கேரனின் தோட்டத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!