இந்தியா தோற்றாலும்... இங்கிலாந்தை சும்மா விடமாட்டோம்! முதன் முறையாக பேசிய ரவிசாஸ்திரி
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் தோல்வியடைந்ததை விட, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை நினைத்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இது குறித்து எதுவும் கூறாமல் இருந்த ரவிசாஸ்திரி, தற்போது அது குறித்து பேசியுள்ளார். இந்த டெஸ்ட் தொடர் மிகவும் பெரியது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு தலைபட்சமாக, அதாவது இன்னிங்ஸ் தோல்வியைப் பற்றி நினைப்பதை விட, லார்ட்சில் நாங்கள் பெற்ற வெற்றியை நினைத்து பார்க்க வேண்டும். இது விளையாட்டில் எளிதானது. தோல்வியை நினைத்து பார்க்க வேண்டாம்.
அதை மறைந்து விட வேண்டும். எப்போதும் வீரர்கள், அவர்களின் நல்ல தருணங்களை மட்டுமே நினைவில் வைத்து கொள்ள வேண்டும். மூன்றாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து முழுவதும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள்ளே வைத்துக் கொண்டது.
அவர்கள் ஒரு வாய்ப்பு கூட இந்தியாவுக்கு கொடுக்கவில்லை. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், இங்கிலாந்து அணி டிரைவர் சீட்டில் உட்கார்ந்துவிட்டது. அவர்கள் அற்புதமாக பந்து வீசினார்கள்.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அவர்கள் எங்களை பின் தள்ளிவிட்டனர். நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டம் என்ற வலுவான நிலையில் இருந்து, சண்டை போட்டாலும், அதன் முடிவு மோசமாக அமைந்துவிட்டது.
இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளது. தொடர் இப்போது 1-1 என்று சமநிலையில் உள்ளது. நாங்கள் வெளிநாட்டில் விளையாடுகிறோம்.
இது இங்கிலாந்து அணிக்கு தான் அழுத்தம், ஏனெனில் அவர்கள் சொந்த நாட்டில் வெல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். நாங்கள் போராடுவோம் என்று கூறியுள்ளார்.