நெருங்கும் தேர்தல் நாள்... நாட்டைவிட்டு மொத்தமாக வெளியேறும் பெரும் கோடீஸ்வரர்கள்
அமெரிக்காவில் மிக குழப்பமான சூழலில் ஜனாதிபதி தேர்தல் முன்னெடுக்கப்படும் நிலையில் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒன்று நாட்டைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோடீஸ்வர குடும்பங்கள்
அரசியல் மாற்றம் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை பற்றிய பெருகிவரும் அச்சங்களை மேற்கோள் காட்டி இந்த வெளியேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பங்கள், தங்கள் செல்வாக்கு மிகுந்த வாழ்க்கையை கைவிட்டு, வெளிநாடுகளில் தஞ்சமடையும் முடிவுக்கு வந்துள்ளனர்.
தொடர்புடைய குடும்பங்களின் சட்டத்தரணிகள், ஆலோசகர்கள் உள்ளிட்டவர்கள் தெரிவிக்கையில், பல எண்ணிக்கையிலான தங்களின் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான இன்னொரு கடவுச்சீட்டுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் அல்லது வெளிநாடுகளில் குடியேறும் வாய்ப்புகள் தொடர்பில் ஆலோசித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோன்ற ஒரு சூழல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை என்றே அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அமெரிக்காவை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாடுகளில் குடியேறுதல் அல்லது இரண்டாவது கடவுச்சீட்டு கோரும் அமெரிக்க மக்களின் எண்ணிக்கை 504 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
மோசமான வன்முறைகள்
அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்கள் பலர் தற்போது ஐரோப்பிய நாடுகளான போர்த்துகல், மால்டா, ஸ்பெயின், கிரீஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் குடியேற திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.
பெரும்பாலான பெரும் கோடீஸ்வரர்களின் கவலை என்பது டொனால்டு ட்ரம்ப் வெற்றிவாய்ப்பை இழந்தால் நாட்டில் ஏற்படவிருக்கும் மோசமான வன்முறைகள் அல்லது கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டால், சொத்து மதிப்பு 100 மில்லியன் டொலருக்கும் அதிகமானோருக்கு விதிக்கவிருக்கும் சொத்து வரி உள்ளிட்டவையே என கூறுகின்றனர்.
ஆனால் சொத்து வரி விதிக்கப்படும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |