கொட்டித்தீர்த்த கனமழை... கடும் வெள்ளப்பெருக்கு: பிரித்தானிய மக்களுக்கு ஒரே நாளில் 5 எச்சரிக்கை
பிரித்தானியாவின் சில பகுதிகளில் பல மணி நேரம் கொட்டித்தீர்த்த கன மழையால் நதிகள் கரைபுரண்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் சில பகுதிகளில் வரும் நாட்களில் கிட்டத்தட்ட ஒரு அடி அளவுக்கு வெள்ளம் சூழும் வகையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த தொடர் மழையால் மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, இன்று ஒரே நாளில் மட்டும் 5 வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு கடுமையானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், மக்கள் நீரோட்டம் மிகுந்த பகுதிகள் மற்றும் ஆழமான பகுதிகளில் இருந்து விலகியிருக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக ரயில்கள் மற்றும் பேருந்து சேவைகள் தாமதமாக அல்லது ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில பகுதி மக்கள் வெள்ளநீரால் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சில கும்பிரியன் நீர்வீழ்ச்சி பகுதிகளில் கிட்டத்தட்ட 300 மி.மீ அளவுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழையானது ஒருசில நாட்களில் பெய்யக்கூடும் எனவும், வியாழக்கிழமை இரவு வரையில் இதே நிலை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தெற்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் வியாழன் நள்ளிரவு வரை சுமார் 100 மிமீ மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, நேற்று மாலை கிளாஸ்கோ நகரில் தொடர்ந்து கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன சாரதிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.