முதல் சதமே முச்சதம் அடித்த வீரர் - காலமான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ்
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவானான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமாகியுள்ளார்.
காலமான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ்
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவானான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் தனது 89வயதில் நேற்று காலமாகியுள்ளார்.

1936 ஆம் ஆண்டில் பிறந்த கார்ஃபீல்ட் சோபர்ஸ், தனது 16 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட தொடங்கி 17 வயதில் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.
சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த பீல்டர் என அந்த காலகட்டத்தின் தலை சிறந்த ஆல் ரவுண்டராக சோபர்ஸ் வலம் வந்தார்.
இந்தியாவிற்கு எதிராக அறிமுகமான முதல் முதல்தர போட்டியிலே 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என இரண்டையும் வீசி துடுப்பாட்டக்காரர்களை திணற வைத்த சோபர்ஸ். 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 235 விக்கெட்களையும், 383 முதல்தர போட்டிகளில் விளையாடி 1,043 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
சோபர்ஸ் 21 வது வயதில், 1958 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்ததோடு, ஆட்டமிழக்காமல் 365 ஓட்டங்கள் எடுத்து அப்போதைய டெஸ்ட்டில் தனிநபர் அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையை படைத்தார்.

36 ஆண்டுகளுக்கு பிறந்து 1994 ஆம் ஆண்டில், சக மேற்கிந்திய தீவுகள் வீரரான பிரையன் லாரா 375 ஓட்டங்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்தார்.
93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்கள், 30 அரைசதங்கள் உட்பட 8,032 ஓட்டங்களையும், 383 முதல்தர போட்டிகளில் விளையாடி 86 சதங்கள், 121 அரைசதங்கள் உட்பட 28,314 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
ஸ்வான்சீயில் நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்காக விளையாடியபோது, கிளாமோர்கனின் மால்கம் நாஷின் பந்துவீச்சில் முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சோபர்ஸ் பெற்றார்.
1966 ஆம் ஆண்டு இங்கிலாந்து கால்பந்து உலகக்கிண்ண தொடரை நடத்தி, வெற்றியை கொண்டாடியபோது, சோபர்ஸ் அந்த அணிக்கு எதிரான் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 சதம் உட்பட 722 ஓட்டங்கள் குவித்ததோடு, 20 விக்கெட்டுகள் மற்றும் 10 கேட்ச் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அந்த தொடரில் அணித்தலைவராக இருந்த அவர், 5 போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வென்றதுடன் உட்பட 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினார்.
டெஸ்ட் வரலாற்றில் 5,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தும், 200 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியும் உள்ள 5 ஆல் ரவுண்டர்களில் சோபர்ஸும் ஒருவர்.

ஓய்வு பெற்றதும் இரண்டாம் எலிசபெத் ராணி அவருக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்தார்.
ஐசிசி அவரை கௌரவிக்கும் வகையில், ஆடவர் கிரிக்கெட்டிற்கான முதன்மையான வருடாந்திர விருதாக 'சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது', அவரது பெயரில் வழங்கி வருகிறது.
சர் கார்ஃபீல்ட் சோபர்ஸின் மறைவிற்கு கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், கபில்தேவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |