முடிவுக்கு வந்தது வங்க தேசத்தின் டி20 உலகக் கோப்பை கனவு! வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியடைந்ததின் மூலம் வங்க தேசத்தின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்துள்ளது.
ஷார்ஜாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1ல் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ்-வங்க தேசம் அணிகள் மோதின.
இரு அணிகளும் விளையாடி இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளன.
இந்த போட்டியில் தோல்வியடையும் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகிவிடும் என்பதால் வெற்றிப்பெறும் முனைப்போடு இரு அணிகளும் களமிறங்கின.
டாஸ் வென்ற வங்க தேச அணி முதல் பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதல் பேட்டிங்கை செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.
கெயில் (4), எவின் லூயிஸ் (6), ஹெட்மியர் (9), கேப்டன் போலார்டு 8 ரன்களில் தானாகவே பேட்டிங்கிலிருந்து ஓய்வு பெற்று ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
அதைத்தொடர்ந்து ஆண்ட்ரூ ரசல் (0), பூரன் (40), ரோஸ்டன் சேஸ் (39), பிராவோ (1) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் மீண்டும் களமிறங்கிய போலார்டு கடைசி பந்தில் சிக்சர் அடித்தார், அவருடன் ஜேசன் ஹொல்டர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்நிலையில் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்க அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியை தழுவியது.
சூப்பர் 12 சுற்றில் விளையாடி 3 போட்டியிலும் தோல்வியடைந்த வங்க தேச அணியின் டி20 உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தள்ளது.
வங்க தேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ததின் மூலம் வெஸ்ட் இண்டீஸின் உலகக் கோப்பை கனவு உயிர்ப்புடன் உள்ளது.
இதனால் மைதானத்திலிருந்த வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது குரூப் 1 புள்ளிப்பட்டியலில், இங்கிலாந்து விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா (2 வெற்றி) 4 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (1 வெற்றி, 1 தோல்வி) 2 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும், இலங்கை (1 வெற்றி, 1 தோல்வி) 2 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (1 வெற்றி, 2 தோல்வி) 2 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், வங்க தேசம் (3 தோல்வி) புள்ளிகள் ஏதுமின்றி 6வது மற்றும் கடைசியிடத்தில் உள்ளது.