இலங்கை அணியின் பந்துவீச்சில் மிரண்ட மேற்கிந்திய தீவுகள்: 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணம் போட்டியின் 35வது ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் சேர்த்தது.
சரித அசலங்கா 41 பந்துகளில் 68 ஓட்டங்கள் குவித்தார். நிசாங்கா 41 பந்துகளில் 51 ஓட்டங்களும் குவித்து இலங்கை அணிக்கு அதிரடியான ஓட்ட எண்ணிக்கையை கொண்டு வந்தனர்.
ஆட்டத்தின் துவக்கம் முதலே இலங்கை வீரர்கள் துடிப்புடன் விளையாட, துவக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 42 ஓட்டங்கள் சேர்த்தனர். 21 பந்துகளில் 29 ஓட்டங்கள் சேர்த்து குசால் பெரேரா விக்கெட்டை இழக்க, அசலங்கா- நிசாங்கா ஜோடி சரவெடியாக ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர்.
இந்த ஜோடி 15.3 ஓவர்களில் 133 ஓட்டங்கள் என்ற பாதுகாப்பான இலக்கை எட்டிய நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் தசுன் ஷனக 14 பந்துகளில் 25 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரஸ்செல் அதிகபட்சமாக 2 விக்கெட்டையும் பிராவோ 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து 190 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் சேர்த்து வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்தத் தோல்வியுடன் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி உலகக்கிண்ணம் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அணியின் முதன்மை வீரர்கள் அனைவரும் ஏமாற்றமளிக்க ஹெட்மயர் மட்டுமே இலங்கையின் அதிரடி பந்துவீச்சை சமாளித்து 54 பந்துகளில் 81 ஓட்டங்களுடன் கடைசிவரை விக்கெட்டை பறிகொடுக்காமல் இருந்தார்.
நிக்கொலாஸ் பூரான் 34 பந்துகளில் 46 ஓட்டங்கள் சேர்த்திருந்தார். அணித்தலைவர் பொல்லார்ட் வந்த வேகத்தில் ரன் ஏதுமின்றி திரும்ப, பிராவோ 3 பந்துகள் சந்தித்து 2 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்கா 4 ஓவர்களில் 19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பினுர பெர்னாண்டோ, சமிகா கருணாரத்ன, ஆகியோரும் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். துஷ்மந்த சமீரா, தசுன் ஷனகா தலா ஒரு விக்கெட்கள் எடுத்தனர்.