இலங்கை தவறவிட்ட 2 கேட்சுகள்: பறிபோன வெற்றிக்கிண்ணம்..மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்
இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
169 ஓட்டங்கள்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 169 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. துணித் வெல்லலாகே (Dunith Wellalage) 28 பந்துகளில் 43 ஓட்டங்களும், கமில் மிஷாரா 28 ஓட்டங்களும் எடுத்தனர்.

அபாரமாக பந்துவீசிய ஷாமர் ஜோசப் (Shamar Joseph) 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஓரளவு ஓட்டங்களை சேர்த்த ரோவ்மன் பௌல் 33 ஓட்டங்களில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால், ஷெர்பானே ரூதர்போர்டு (Sherfane Rutherford) அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினர்.

வெல்லலாகே ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், இஷான் மலிங்கா ஓவரில் அடித்த ஷாட் கேட்ச் ஆக சென்றது. பந்துவீசிய இஷான் மலிங்காவே அதை பிடிக்க முயன்று தவறவிட்டார்.

ரூதர்போர்டு அரைசதம்
அதனைத் தொடர்ந்து, தீக்ஷணா ஓவரில் ரூதர்போர்டின் கேட்சை ஷானகா தவறவிட, அது சிக்ஸர் ஆக மாறியது. இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

ரூதர்போர்டு ஓட்டங்களை சேர்க்க, ஜேசன் ஹோல்டர் 19வது ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ஓட்டங்களே தேவைப்பட, ரூதர்போர்ட் பவுண்டரி அடித்து அரைசதம் விளாசினார்.

அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை மேற்கிந்திய தீவுகள் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ரூதர்போர்டு 40 பந்துகளில் 54 ஓட்டங்களும் (4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்), ஹோல்டர் 5 பந்துகளில் 21 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள்) எடுத்திருந்தனர்.

5 விக்கெட்டுகள் சாய்த்த ஷாமர் ஜோசப் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரண்டு விருதுகளை பெற்றார்.
இலங்கை, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆன்டிகுவாவில் 25ஆம் திகதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக 18ஆம் திகதி பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |