அகதிகளுக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளதாக நம்பி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா புறப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அகதிகளுக்கு ஆதரவான புதிய அரசு, சட்ட விரோத புலம்பெயர்வோரை இருகரம் நீட்டி வரவேற்கும் என வாக்களிக்கப்பட்டதை நம்பி படகு ஒன்றில் அவுஸ்திரேலியா நோக்கி அபாயகரமான வகையில் பயணம் புறப்பட்டார் ஒரு இலங்கைப் பெண்.
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி அல்பனீஸ் பொறுப்பேற்றதும், அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து நான்கு ஆண்டுகளாக போராடி வந்த பிரியா நடேஷ் என்னும் இலங்கைத் தம்பதிக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டது.
ஆகவே, அவுஸ்திரேலியாவுக்கு மக்களைக் கடத்த உதவுவோர், பிரியா நடேஷ் விடயத்தை ஒரு முன்னுதாரணமாகக் காட்டி, அவுஸ்திரேலியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அகதிகளுக்கு ஆதரவானது என்றும், சட்ட விரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோரை அந்நாடு இருகரம் நீட்டி வரவேற்கும் என்று கூறி, பணம் வாங்கிக்கொண்டு மக்களை படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வருகிறார்கள்.
அப்படி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகில் பயணம் புறப்பட்டவர்தான் மீனு மேகலா என்ற பெண்.
ஆனால், உயிரைப் பணயம் வைத்து புறப்பட்ட அவரது முயற்சி வீணாகிப்போனது. அவரது படகை வழிமறித்த அதிகாரிகள் அவரது படகை இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
மீனு மேகலா இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், படகில் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோரை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தும் திட்டம் இல்லை என தெளிவுபடக் கூறிவிட்டதுடன், தங்கள் கொள்கையில் மாற்றம் இல்லை என்றும் தெரிவித்துவிட்டார்.