மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 22) தொடங்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவரித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்
நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 1 -ம் திகதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போது, புதிய அரசு அமைந்துள்ளதால் இன்று இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்படவுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும். இன்று அவர் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.
இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 12 -ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில், மத்திய அரசு 6 மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர்
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு எதிர்பார்ப்பவை குறித்து ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2024-இல்,
* மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ திட்டத்திற்கான நிதி * தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்
* பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு
* கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல்
* தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு
* கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |