போராட்டத்தால் ஸ்தம்பிக்கும் டெல்லி - CJP கட்சியின் கோரிக்கைகள் என்ன?
போராட்டத்தை கைவிட CJP கட்சி சில கோரிக்கைகள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி CJP போராட்டம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு பேசியதன் விளைவாக இணையத்தில் உருவான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(CJP) இன்று இந்தியாவையே உலுக்கும் வகையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறது.

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என CJP கடந்த 1 மாத காலமாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
இந்த போராட்டத்தில் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், ஜூன் 28 ஆம் திகதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அவரது உடல்நிலைமோசமடைந்ததையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 18 ஆம் திகதி வலுக்கட்டாயமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, போராட்டக்குழுவினர் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற போது, தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், கடுமையாக தாக்கி காவல்துறையினரும், துணை ராணுவமும் கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் நாடு தழுவிய அளவில் பதற்றம் உருவானது. எதிர்க்கட்சி தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகள் என்ன?
போராட்டத்தின் இடையே மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்த CJP பிரதிநிதிகள், சோனம் வாங்சுக்கை விடுதலை செய்ய வேண்டும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வு தொடர்பாக உயிரை மாய்த்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இந்நிலையில், தற்போது போராட்டத்தை கைவிட CJP கோரிக்கைகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அநத கோரிக்கைகள் நீட் தேர்வு தொடர்பான சீர்திருத்தங்களாக உள்ளது.
தற்போதைய தேசிய தேர்வு முகமையை கலைத்துவிட்டு, சட்ட வரம்புக்குட்பட்ட தேசிய தேர்வு ஆணையத்தை அமைக்கவேண்டும் என்றும் அதன் செயல்பாடுகளை தலைமை கணக்காயர் உள்ளிட்ட வழிகளில் கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நீட் தேர்வு முறையிலிருந்து வெளியேற விரும்பும்மாநிலங்களுக்கு அனுமதி அளிப்பதுடன், நீட் பாடத்திட்டத்தை முடிவு செய்வதில் மாநில அரசுகளின் பங்களிப்பையும் உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்துகிறது.
வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, தள்ளிவைப்பு போன்றவற்றால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு இழப்பீடு, மற்றும் வயது வரம்பு தளர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கவேண்டும் என்று கோருகிறது.
இதுவரை நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள், முறைகேடுகள் குறித்து 6 மாதத்திற்குள் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
வினாத்தாள் கசிந்தால் அதில் தொடர்புள்ளவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, நாடாளுமன்றத்தில் அமைச்சர் அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் ஆகியவற்றை சட்டமாக இயற்ற கோரிக்கை வைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |