அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு! பிரித்தானியாவில் பிளான்-C கட்டுப்பாடுகளா? கிடைத்த தெளிவான பதில்
பிரித்தானியாவில் ஒமைக்ரான் தொற்றும் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்த பிளான்-C திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் என்னென்ன கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தற்போது பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பிளான்-பி திட்டத்திற்கான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த புதன் கிழமை கூறினார்.
அதன் படி, வரும் 13-ஆம் திகதி முதல் முடிந்த வரை அலுவலகத்திற்கு சென்று வேலை செய்பவர்கள், வீட்டில் இருந்து வேலை செய்யும் படியும், பெரும்பாலான மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, வரும் 15-ஆம் திகதி முதல் இரவு விடுதிகள் மற்றும் பெரிய நிகழ்வுகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், பிளான்-C என்ற திட்டம் இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து இது குறித்து பிரபலா ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், அதிகாரிகள் தற்போது இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும், அதே சமயம் பிளான்-C என்ற திட்டம் இல்லை என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிரதம மந்திரியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரிடம் இது குறித்து கேட்ட போது, ஏற்கனவே அரசு வைத்துள்ள திட்டத்தை தவிர, வேறு எந்த திட்டமும் இப்போதைக்கு இல்லை.
அதே போன்று பிளான்-C திட்டம் இருக்கிறதா என்று கேட்ட போது, அவர் தனக்கு தெரியாது. ஏற்கனவே பல திட்டங்கள் உள்ளதால், எந்த மாறுபாடும் இருக்காது, என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளதால், அதற்கு மேல் செல்ல எந்த ஒரு திட்டமும் இல்லை என்று தெளிவாக கூறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.