புலம்பெயர்தலா பொருளாதாரமா எதற்கு ஆதரவு?: வாக்கெடுப்பில் சுவிஸ் மக்கள் எடுத்துள்ள முடிவு
புலம்பெயர்தல் கொள்கைகளுக்கு எதிரானது என கருதப்படும் விடயம் ஒன்று சுவிஸ் மக்கள் முன் வாக்கெடுப்புக்காக விடப்பட்டது.
அதாவது, நேற்று பல முக்கிய விடயங்களை முடிவு செய்வது தொடர்பில் சுவிஸ் மக்கள் வாக்களித்தார்கள்.
முடிவெடுக்கும்படி அவர்கள் முன் வைக்கப்பட்ட விடயங்களில் ஒன்று, ஐரோப்பிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு ஒன்றிற்கான சுவிட்சர்லாந்தின் நிதியுதவியை அதிகரிக்கலாமா வேண்டாமா என்பதாகும்.
Frontex என அழைக்கப்படும் இந்த ஐரோப்பிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு, எல்லை தாண்டி நடத்தப்படும் மனிதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் போன்ற எல்லைகளுக்கிடையிலான குற்றச்செயல்களைத் தடுத்தல், மற்றும் புகலிடம் கோருவோரைக் கட்டுப்படுத்துதல் ஆகிய விடயங்களைக் கையாள்கிறது.
ஆனால், அந்த அமைப்பின் மீது பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அது புகலிடக் கோரிக்கையாளர்களை அபாயத்துக்குள்ளாக்குவதாகவும், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன.
ஆனால், சுவிஸ் ஆட்சியாளர்களோ, அந்த அமைப்பு கட்டுப்படுத்தியதால்தான் புலம்பெயர்வோர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதாக கூறுகிறார்கள்.
இதற்கிடையில், வாக்கெடுப்புக்கு முன்னரே, மக்கள் இந்த Frontex என அழைக்கப்படும் இந்த ஐரோப்பிய எல்லைப் பாதுகாப்பு அமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால், சுவிட்சர்லாந்து Schengen அமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது என்றும், நாடுகளுக்கிடையிலான தடையில்லா போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும், அது சுவிஸ் பொருளாதாரத்தையே பாதித்துவிடும் என்றும் சுவிஸ் அரசு மக்களை எச்சரித்தது.
ஆகவே, புலம்பெயர்தலா, பொருளாதாரமா, பாதுகாப்பா என்ற கேள்விகளை அலசி ஆராய்ந்த சுவிஸ் மக்கள் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளித்து, புலம்பெயர்தலை பின்னுக்குத் தள்ளி, Frontex எல்லைப் பாதுகாப்பு அமைப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
அந்த அமைப்புக்கு நிதியுதவியை அதிகரிப்பதற்கு ஆதரவாக 71.5 சதவிகிதம் பேரும், எதிராக 28.5 சதவிகிதம் சுவிஸ் மக்களும் வாக்களித்துள்ளார்கள்.