ஜேர்மனி அஞ்சியது நடந்தேவிட்டது: எரிவாயு வழங்கலை காலவரையரையின்றி நிறுத்தியது ரஷ்யா...
ஜேர்மனிக்கு வழங்கப்பட்டு வந்த எரிவாயுவை முற்றிலும் நிறுத்திவிட்டது ரஷ்யா.
ரஷ்ய நிறுவனம் மீண்டும் எரிவாயு வழங்கலைத் தொடர்வது சந்தேகமே என ஏற்கனவே ஜேர்மன் அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பல நாடுகள் அந்நாட்டின் மீது தடைகள் விதித்தன. பதிலுக்கு ரஷ்யா பல்வேறு காரணங்களைக் கூறி, பல ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயுவின் அளவைக் குறைத்தது.
இந்நிலையில், ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom, வழக்கமான பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகத்து 31 முதல் செப்டம்பர் 2 வரை ஜேர்மனிக்கு வழங்கப்பட்டு வரும் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட இருப்பதாக அறிவித்தது.
அப்போது, ரஷ்யா மீண்டும் எரிவாயு விநியோகத்தை வழங்குவது சந்தேகம்தான் என்று கூறியிருந்தார் ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சரான Robert Habeck.
அவர் சொன்னதுபோலவே, குழாய் மூலம் எரிவாயு அனுப்பும் இயந்திரத்தின் பாகங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது Gazprom நிறுவனம்.
அத்துடன், எரிவாயு அனுப்பும் குழாயில் கசிவு இருப்பதாகக் கூறி எரிவாயு விநியோகத்தை நிறுத்தியுள்ள அந்நிறுவனம், எப்போது மீண்டும் எரிவாயு விநியோகம் துவங்கும் என்று கூறவில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சரான Robert Habeckஇன் செய்தித்தொடர்பாளர், ரஷ்யாவை நம்ப முடியாது என்பதை கடந்த சில வாரங்களாகவே கண்கூடாகக் கண்டுவருகிறோம். ஆகவே, ரஷ்யாவிடமிருந்து எரிவாயு இறக்குமதி செய்வதைத் தவிர்க்க தொடர்ந்து மாற்று ஏற்பாடுகள் செய்துவருகிறோம் என்று கூறியுள்ளார்.