இந்தியா மீது கனடா கூறியிருந்த குற்றச்சாட்டு என்ன ஆனது? இந்திய உயர் ஸ்தானிகர் கேள்வி
கனடா மண்ணில் கனேடியர் ஒருவர் கொல்லப்படதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எங்கே என கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா மீது கனடா பரபரப்புக் குற்றச்சாட்டு
ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இரு நாடுகளும் மற்ற நாட்டின் தூதர்களை தத்தம் நாட்டை விட்டு வெளியேற்றின.
தங்கள் குற்றச்சாட்டுக்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதாக கூறியிருந்த கனடா உளவுத்துறை, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து செயல்படும் Five Eyes என்னும் உளவு அமைப்பிலிருந்தும், தொலை தொடர்பு தகவல்களிலிருந்தும் அந்த ஆதாரத்தை பெற்றதாகவும் கூறியிருந்தது.
இந்திய உயர் ஸ்தானிகர் கேள்வி...
ஆனால், இதுவரை கனடாவோ, அதன் கூட்டாளி நாடுகளோ இதுவரை எந்த ஆதாரத்தையும் இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை.
இந்நிலையில், கனடா இந்தியாவுகெதிராக கூறிய குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எங்கே என்றும், விசாரணையின் முடிவு என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார், கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகரான சஞ்சய் குமார் வர்மா.
சட்ட விரோதமாக தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதை ஆதாரமாகக் கூறுகிறீர்கள், அப்படி இரண்டு தூதர்களுக்கிடையிலான உரையாடலை ஒட்டுக் கேட்பது சர்வதேச சட்டப்படி குற்றம், அப்படியே உரையாடல்கள் கிடைத்திருந்தாலும், யாரோ ஒருவர் தூதர்களைப்போல குரலை மாற்றிப் பேசி ஏமாற்றிருக்கலாமே என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இரு நாடுகளுக்கிடையில் எந்த பிரச்சினையானாலும், அதை இரு நாட்டு தூதர்களும் முறைப்படி உட்கார்ந்து பேசித் தீர்ப்பதை இருதரப்பும் உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |