ஒரு மாதம் டீ-பிஸ்கட் மட்டும் காலை உணவாக எடுக்குறீங்களா? பல சிக்கல் ஏற்படும் ஜாக்கிரதை
காலை உணவாக டீ-பிஸ்கட்டை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
காலை உணவாக டீ-பிஸ்கட்
இன்றைய அவசர உலகத்தில் காலை உணவிற்கு பெரிதும் முக்கியத்தும் கொடுக்காமல் மக்கள் சென்று வருகின்றனர்.
அதிலும் டீ பருகுவது, பிஸ்கட் சாப்பிட்டு பசியை போக்குவது என்று செய்து வருகின்றனர். அதிலும் காலை உணவைத் தவிர்த்து வெறும் டீ-பிஸ்கட் இவற்றினை மட்டும் தொடர்ந்து சாப்பிடுபவர்களும் உள்ளனர்.
இந்த பழக்கத்தினை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் ரத்த சர்க்கரை, ஆற்றல், வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.

பாதிப்புகள் என்ன?
மைதா மற்றும் சர்க்கரை அதிக கிளைசெமிக் குறியீடு கொண்டவை என்பதால், ரத்த சர்க்கரை அளவை வேமாக உயர்த்துமாம். இதனை சமாளிக்க அதிக இன்சுலின் சுரக்கும். இந்நிலையில், தொடர்வதால் இன்சுலின் எதிர்ப்புத் திறன் உருவாகி, சர்க்கரை நோய், தொப்பை, கொழுப்பு பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் காலையில் டீ-பிஸ்கட்டை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் ஆற்றல் சட்டெனக் குறைந்து சோர்வு, எரிச்சல் ஏற்படுவதுடன் நொறுக்குத் தீனி மீதான ஆசையும் ஏற்படும்.

அதுமட்டுமின்றி சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் கொழுப்புகளால் ஆன இந்த உணவு வெற்று கலோரிகளை மட்டுமே கொடுப்பதால், தேவையான புரதம் கிடைக்காமல் தசை இழப்பும், தொடர் பசியும் ஏற்படும்.
இதில் 2 கிராமுக்கும் குறைவான நார்ச்சத்தால் மலச்சிக்கல் வரலாம். மேலும் டீ-யில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுத்து ரத்த சோகை அபாயத்தை அதிகரிக்கும்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, எலும்பு பலவீனம் ஏற்படுவதுடன், எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால், உடல் வீக்கம், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படலாம்.
ஆரோக்கியத்திற்கு என்ன செய்யலாம்?
டீ குடிக்கும் பழக்கத்தினை நிறுத்த தேவையில்லை. ஆனால் பாக்கெட் பிஸ்கட்டை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக குறைந்த கொழுப்புள்ள பாலுடன் இஞ்சி, ஏலக்காய், பட்டை சேர்த்து சர்க்கரையில்லாத டீ-யை பருகலாம்.
அதே போன்று பிஸ்கெட்டிற்கு பதிலாக ஊற வைத்த பாதாம் அல்லது 20 கிராம் அளவில் வறுத்த மக்கானா, வேக வைத்த முட்டை, கடலை மாவு அடை, வெள்ளரி, கேரட் துண்டுகள் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.
இனிப்பு சாப்பிட தோன்றினால் கொய்யா அல்லது வாழைப்பழம் இவற்றினை சாப்பிடலாம். இவ்வாறு புரதம் மற்றும் நார்ச்சத்து சேர்வதால் சீரான ஆற்றலையும், ஆரோக்கியத்தினையும் பெற முடியும்.
