சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்வதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கிய விடயங்கள்: சிலரது அனுபவப் பாடங்களிலிருந்து...
சுவிட்சர்லாந்தில் 2.1 மில்லியன் வெளிநாட்டவர்கள் வாழ்கிறார்கள்...
சுவிட்சர்லாந்தில் வாழப்போகிறோம் என்பது தெரியவந்ததும் மகிழ்ச்சி அடைந்த பலர், அவர்கள் சுவிட்சர்லாந்துக்கு வந்ததற்குப் பிறகு, அடடா இந்த விடயங்கள் எல்லாம் நமக்கு முன்பே தெரியாமல் போய்விட்டதே என, இப்போதும் தங்களைக் கவலைகொள்ளவைக்கும் சில விடயங்களைக் குறித்து பகிர்ந்துகொள்கிறார்கள்.
அவை என்னென்ன விடயங்கள் என இந்தக் கட்டுரையில் காணலாம்...
1. ஞாயிற்றுக்கிழமைகளில் கடை கிடையாது என்கிற உண்மை
அயர்லாந்திலிருந்து சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்த Aideen McCarthy, அப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் கடை கிடையாது என்பது தனக்குத் தெரியாது என்றும், சுவிட்சர்லாந்துக்கு வருவதற்கு முன்பே அது தெரிந்திருந்தால் அதற்கேற்றாற்போல தினசரி நடவடிக்கைகளைத் திட்டமிட்டிருப்பேன் என்றும் கூறுகிறார்.
பிறகுதான், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஞாயிற்றுக்கிழமை என்பது ஒரு வார உழைப்புக்குப் பின், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிடும் ஒரு நாள் என்பதைத் தான் புரிந்துகொண்டதாக தெரிவிக்கிறார் Aideen.
2. சுவிட்சர்லாந்தை சொந்த நாடு போல கருதும் மனப்பான்மை
இங்கிலாந்திலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த Bev Smith, தனது கணவருக்கு சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்ததால் தாங்கள் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்ததாகவும், அது தற்காலிகமான ஒரு மாற்றம் என்றே தான் ஆரம்பத்தில் எண்ணி வாழ்ந்ததாகவும், நான்கு வருடங்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தபிறகு, அடடா, அப்போதே இது நம் புதிய வீடு என்ற எண்ணம் முன்பே நமக்கு வந்திருந்தால், இன்னமும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்கலாமே என்றும் கூறுகிறார்.
இப்போதுதான், தன் வீட்டுத் தோட்டத்தில் மலர்ச்செடிகளை நட்டு வருவதாகவும், அக்கம் பக்கத்தவர்களிடம் நெருங்கிய நட்பு பாராட்டிவருவதாகவும் தெரிவிக்கிறார் அவர்.
3. ஜேர்மன் மொழி பேசத்தெரிவதால் ஏற்படும் நன்மை
Gary Colen, ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்குக் குடிபெயர்ந்தவர். தனக்கு ஜேர்மன் மொழி தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என தான் வருந்துவதாக தெரிவிக்கிறார் அவர்.
4. பழைய மரச்சாமான்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்த Carrie Aikman, தான் குடிபெயர்ந்தபோது, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மரச்சாமான்கள் (second-hand furniture) போன்றவற்றை வாங்குவது எப்படி என்பது தெரிந்திருந்தால், அது தனக்கு அப்போது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்கிறார்.
5. சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரியான வரி உண்டு
இங்கிலாந்திலிருந்து ஒன்பது மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்த Kathryn Padain, ஜேர்மன் மொழி கற்றுக்கொண்டு வருகிறார். அக்கம் பக்கத்தில் புதிதாக அவருக்குப் பல நண்பர்களும் கிடைத்துவிட்டார்கள். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு வித வரி, விலைவாசி என்று இருப்பது அப்போதே தெரிந்திருந்தால் அதற்கேற்றாற்போல வாழ்க்கையைத் திட்டமிட்டிருப்பேனே என்கிறார் அவர்.
6. உன்னிப்பூச்சிகள் தொல்லை
பிரித்தானியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்த James Mcmanaman, சமையலறையில் நிற்கும்போது கால்களில் ஏதோ ஊர்வது போலிருக்க, அப்போதுதான் சுவிட்சர்லாந்தில் உன்னிப்பூச்சிகள் (ticks) என்னும் பூச்சிகள் உண்டு என்பதைக் குறித்து அறிந்துகொண்டிருக்கிறார்.
முன்பே அவை குறித்து அறிந்திருந்தால் தான் திகிலடைந்திருக்க மாட்டேனே என்கிறார் James.
இப்படி, சுவிட்சர்லாந்துக்கு வந்தபிறகு அனுபவப் பாடம் மூலம் இத்தகைய விடயங்களைத் தெரிந்துகொண்ட இவர்கள், ஒருவேளை சுவிட்சர்லாந்துக்கு குடிபெயரும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், அவை உங்களுக்குப் பயன்படலாம் என்பதால், முன்கூட்டியே தங்கள் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.