கொரோனா சான்றிதழ் என்பது என்ன?: சுவிஸ் பசுமை சான்றிதழின் பயன்கள் குறித்த விவரங்கள்
கொரோனா சான்றிதழ் அல்லது Covid-19 pass அல்லது green pass எனப்படும் சான்றிதழ் காகித வடிவிலும் டிஜிட்டல் வடிவிலும் கிடைக்கிறது. நீங்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டீர்கள், உங்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு நீங்கள் அதிலிருந்து விடுபட்டுவிட்டீர்கள் அல்லது கொரோனா சோதனையில் உங்களுக்கு கொரோனா இல்லை
என்பதற்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரம்தான் இந்த கொரோனா சான்றிதழ் என்கிறது சுவிஸ் அரசு. இந்த ஆவணம் சர்வதேச பயணத்துக்கு பெருமளவில் உதவக்கூடிய ஒரு விடயம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் நிலையில், அதனால் உள் நாட்டில் என்ன பயன் என்பது பலருக்கும் தெரியவில்லை
சுவிஸ் கொரோனா சான்றிதழால் உள் நாட்டில் என்னென்ன பயன்கள்?
கொரோனா சான்றிதழ் சர்வதேச பயணத்துக்கு உதவிகரமாக இருக்கும் நிலையில், உள் நாட்டில் அரசியல் ரீதியாக அது இன்னமும் தர்க்கங்களுக்கு ஆளாகி வருகிறது. மாகாணங்கள் ஆணையமும் தேசிய ஆணையமும் இந்த சான்றிதழை சகஜ நிலக்கு திரும்ப உதவும் ஒரு விடயமாக பார்க்கும் நிலையில், வலது சாரி SVP கட்சி மட்டும் அதை எதிர்க்கின்றது.
கொரோனா சான்றிதழ் எப்படி வேலை செய்கிறது?
இந்த சான்றிதழ், மூன்று நிற அமைப்பு ஒன்றின் அடிப்படையில் செயல்படுகிறது. சுவிட்சர்லாந்தில் மக்கள் செல்லும், பங்கேற்கும் இடங்கள், பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு என்னும் மூன்று நிறங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
அடிப்படை தேவை என கருதப்படும் பச்சை நிறம் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை. அதாவது, கடைகள், பள்ளிகள், உணவகங்கள் முதலான அலுவலகங்கள், பொதுப்போக்குவரத்து மற்றும் மத ரீதியான இடங்களுக்கு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை. தனியார் நிகழ்ச்சிகளும் பச்சை நிறத்தின் கீழ்தான் வருகின்றன.
அடுத்ததாக, அடிப்படை தேவை இல்லை, ஆனாலும் மக்கள் அதிகம் விரும்பி செல்லும் மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் தியேட்டர்கள் ஆரஞ்சு நிறத்தின் கீழ் வருகின்றன.
1,000 பேர் பங்கேற்கும் வர்த்தக கண்காட்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் முதலானவையும் இதன் கீழ்தான் வருகின்றன, அத்துடன், முதியோர் இல்லங்களை சந்திப்பதும்... ஆரஞ்சு பகுதிகளைப் பொருத்தவரை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்னென்ன விதிகளை அறிமுகப்படுத்துவது என்பதை முடிவு செய்வார்கள்.
ஒரு நிகழ்ச்சியில் மக்களை அனுமதிக்க கொரோனா சான்றிதழ் தேவையா இல்லையா என்பதை முடிவு செய்வது அவர்கள்தான்.
இறுதியாக, சிவப்பு பகுதிகள்... எந்தெந்த இடங்களில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதோ அந்த இடங்கள் சிவப்பு பகுதிகளின் கீழ் வருகின்றன. 1,000க்கு அதிகமான மக்கள் கூடும் நிகழ்ச்சிகள், சர்வதேச பயணம், இரவு விடுதிகள் மற்றும் நடனம் போன்ற பெரிய நிகழ்ச்சிகள் சிவப்பு பகுதிகளின் கீழ் வருகின்றன.
இந்த விடயங்களுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் தேவை!